தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய பாக் எல்லையில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை!

201610181049541292_pakistani-troops-shells-loc-posts-in-rajouri-violate_secvpfஇந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களின்மீது நமது ராணுவ வீரர்கள் நடத்திய ஆவேச தாக்குதலுக்கு பிறகு மட்டும் சுமார் 25 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளின்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று பின்னிரவு மற்றும் இன்று அதிகாலை இருமுறை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி தந்தனர் என ஜம்முவில் உள்ள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 18-ம் தேதிக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் படைகள்மீது இதுவரை 29 முறை அத்துமீறலாக தாக்கியுள்ளது.

இம்மாதத்தில் மட்டும், கடந்த முதல் தேதியன்று இந்திய எல்லையோரம் உள்ள கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. 2-ம் தேதி ஜம்மு எல்லையோரம் உள்ள பல்லான்வாலா எல்லைப் பகுதியில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்கியது. 3-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சவுஜியான், ஷாபூர்-கெர்னி, மன்டி மற்றும் கேஜி எல்லை பாதுகாப்பு முகாம்களின்மீது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியது.

4-ம் தேதி ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பத்து முன்னணி பாதுகாப்புச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தியது. 5-ம் தேதி பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் மூன்று முறை மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியது.

8-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தார்-கிருஷ்ணகட்டி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 16-ம் தேதி ரஜோரி மற்றும் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுதீஷ் குமார்(24) என்பவர் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...