Designed by Iniyas LTD
எமிரேட்சை வீழ்த்தியது இலங்கை!
ஆசியக் கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக திலகரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் களமிறங்கினர். இந்த இருவரும் ஆரம்பத்தை சிறப்பாக கொடுக்க இலங்கை அணி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களைத் தாண்டி நின்றது.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டில்ஷான் தனது டில்ஸ்கூப் மூலம் பந்தை வெளியே விரட்ட இரண்டு மூன்றுமுறை முயன்றும் கடைசியில் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. அதேபோல் ரிவஸ் சுவிப் அடிக்க முற்பட்டும் அவரால் முடியாமல் போனது. இறுதியில் 27 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நின்ற தினேஷ் சந்திமால் சற்று அதிரடியாக ஆடிவந்தார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் தினேஷ் சந்திமாலின் ஓட்ட எண்ணிக்கையால்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 129 ஓட்டங்களை எட்டியது.
இதில் தினேஷ் சந்திமால் 55 பந்துகளுக்கு முகம் கொடுத்து 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இந்த இருபதுக்கு 20 போட்டியில் தினேஷ் சந்திமால்தான் இலங்கை அணி சார்பாக ஒரு சிக்ஸர் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து வந்த ஜயசூரிய மற்றும் கபுகெதர ஆகியோர் தலா 10 ஓட்டங்கள் வீதம் பெற ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
130 என்ற சொற்ப ஓட்ட இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வெற்றி இலக்கை விரட்ட களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக முதல் ஓவரை வீச வந்தார் இலங்கை அணித் தலைவர் லசித் மலிங்க. இவரின் முதல் பந்திலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முஸ்தபா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு அதே ஓவரில் கடைசி பந்தில் ஷாட் ஆட்டமிழக்க முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
அதன் பிறகு 4 விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ ஒரு கட்டத்தில் எமிரேட்ஸ் 50 ஓட்டங்களைத் தாண்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் 6ஆவது விக்கெட்டிற்காக களமிறங்கிய பட்டில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 37 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பாக பந்துவீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
குலசேகர 3 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.