Designed by Iniyas LTD
ஐஎஸ் இயக்கம் அபயகரமானது – அமெரிக்கா
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பு, வழக்கமான பயங்கரவாத அமைப்புகளையெல்லாம் விட மிகவும் அபாயகரமானது என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் செய்தியாளர்களிடம் கூறியது:
மற்ற பயங்கரவாதக் குழுக்களைப் போலவே ஐ.எஸ். அமைப்பும் பணபலம், அதிநவீன வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆனால், இதுவரை நாம் கண்ட பயங்கரவாத இயக்கங்களையெல்லாம் விட அதிபயங்கரமான இயக்கம் அது.
அவர்களிடம் ஆபத்தான சித்தாந்தம், அதிநவீன ஆயுத வல்லமை, வலிமையான நிதி ஆதாரம் ஆகியவை ஒரு சேர அமைந்துள்ளன.
அண்மையில் அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியை அவர்கள் கொன்ற விதமும், அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையும் காட்டுமிராண்டித்தனமானவை.
அவர்களிடம் நாகரிகமோ, மனித இயல்போ துளியும் கிடையாது.
ஜேம்ஸ் ஃபாலி உள்ளிட்ட, சிரியாவிலுள்ள அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவிக்க உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய மீட்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
அங்கு பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள அமெரிக்கர்களைத் தாயகம் அழைத்து வருவதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சியிலிருந்து ஒருபோதும் பின் வாங்காது.
இராக்கில் அமெரிக்க உதவியால்தான் அந்நாட்டு ராணுவமும், குர்து படையும் இர்பில் நகருக்குள் ஐ.எஸ். முன்னேற விடாமல் தடுக்க முடிந்தது. இதனால் அங்கு பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
மொசூல் அணையை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் பக்கபலமாக இருந்தன.
அந்த அணையை மீட்டதன் மூலம், இராக்கிலுள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்ந்து கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்றார் ஹேகல்.
அமெரிக்க ராணுவ கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், “”ஐ.எஸ். அமைப்பின் லட்சியம் நிறைவேறினால், மத்தியக் கிழக்கு நாடுகளின் இயல்பை அது மாற்றியமைத்துவிடும்.
இது பல வழிகளிலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்” என்றார்.
ஐ.எஸ்.ஸூக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்
அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியை ஐ.எஸ். அமைப்பு கொடூரமாக கொலை செய்ததற்கு உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்தச் செயல், இஸ்லாம் மதத்துக்கு எதிரானது எனவும் அவை கூறியுள்ளன.
அமெரிக்க – இஸ்லாமிய கவுன்சில்: செய்தியாளர்கள் ஜேம்ஸ் ஃபாலீ கொல்லப்பட்டது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது. மேலும், போர் நடைபெறும் இடங்களில் பத்திரிகையாளர்களுக்கும், கைதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது. இந்தச் கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வட அமெரிக்க இஸ்லாமிய சங்கம்: இஸ்லாம் மதத்தின் அடிப்படை போதனைகளை, ஐ.எஸ். அமைப்பின் செயல்கள் துளியும் பிரதிபலிக்கவில்லை.
முஸ்லிம் பொது விவகார கவுன்சில்: இஸ்லாம் மதத்தின் முதல் எதிரி, தீவிரவாதம்தான். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு: இராக்கில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஐ.எஸ். கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை, அந்நாட்டின் சமூகக் கட்டமைப்பைக் குலைப்பதாக அமைந்துள்ளது.