தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்பாபுலவு பிரச்சனை ஒட்டுமொத்த பிரச்சனை- இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்..

வடக்கே வனத்தையும் கிழக்கே வயல் நிலங்களையும் தெற்கே நந்திக்கடலையும் மேற்கே வற்றாப்பளை கிராமத்தையும் கொண்ட நீர்வளம் நிலவளம் உள்ள ஒரு அழகிய கிராமமே கேப்பாபுலவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ள கிராமத்துக்கு அயல் கிராமமாக ஆலயத்துக்கு யாத்திரை வரும் பக்தர்களது தாகம் பசியை தீர்த்த ஒரு கிராமமாக   இந்த கிராமம் அமைந்துள்ளது

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்னரே இந்த கிராமம் தோற்றம்பெற்று விட்டதாக இங்குவாழும் மூதாதையர்கள் தெரிவிக்கின்றனர் ஆரம்பகாலத்தில் 3 குடும்பங்கள் இங்கு குடியேறி விவசாய செய்கையை ஆரம்பித்தனர் ஆரம்பகாலத்தில் சேனைப்பயிர் செய்கை இடம்பெற்ற இந்த கிராமம் கேப்பாபுலவு என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது

1946 ம் ஆண்டு காலப்பகுதியளவில் இங்கு வாழ்ந்த குடும்பங்கள் சுமார் 10 வரை அதிகரித்து விவசாயம் மற்றும் கால் நடைவளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தனர்  இவ்வாறே இந்த மக்கள் வாழ்ந்து வந்த காலத்தில் முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் நீராவிப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மீனவ குடும்பங்கள் இந்த கிராமத்தில் வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு சென்றனர்

சுமார் 1970  ம் ஆண்டுக்கு பிற்ப்பட்ட காலத்தில் 2 மீனவ குடும்பங்கள் இந்த பகுதியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் நிரந்தரமாக குடியேறினர் இவ்வாறே இந்த கிராமம்  44 மீனவ குடும்பங்களும் அதனைவிட  விவசாயம் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்த  94 குடும்பங்களுமாக 138 குடும்பங்கள்  இங்கு வாழ்ந்து வந்தனர்

தமக்குள்ளே கிடைக்கும் கடலுணவுகளையும் விவசாய உற்பத்திகளையும் பண்டமாற்று செய்து தமக்கான தன்னிறைவு பொருளாதாரத்துடன் வாழ்ந்து வந்த தாம் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைமைகள் காரணமாக 2008.12.26 ம் திகதி தமது உடமைகள் நிலங்கள் அனைத்தையும் கைவிட்டு தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறி சென்றனர்

இவ்வாறு 138 குடும்பங்கள் கொண்ட  கேப்பாபுலவு  கிராமம் 22 குடும்பங்கள் கொண்ட  சீனியாமோட்டை 50 குடும்பங்கள் கொண்ட  சூரிபுரம் ஆகிய கிராமங்களோடு யுத்த சூழ்நிலைகள் காரணமாக 2003 ம் ஆண்டு AC பாம் யாழ்ப்பாணம் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இடம்பெயர்ந்துவந்த பிலக்குடியிருப்பு பகுதியில் 46 ஏக்கர் காணியில் குடியேறிய 84  குடும்பங்களுமாக மொத்தமாக 294குடும்பங்கள் அடங்கிய 4 கிராமங்களுமே கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவு

இவ்வாறே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த இராணுவமும் விமானப்படையும் இந்த கேப்பாபுலவு கிராம அலுவலர் பிரிவின் 4 கிராமங்களையும் ஆக்கிரமித்து அங்கு நிலைகொண்டுள்ளனர்

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு குறித்த கிராமம் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலையில் இந்த மக்கள் (மெனிக்பாம் முகாமிலிருந்து) இடைத்தங்கல் நிவாரண கிராமத்திலிருந்து  மீள்குடியேற்றம் செய்யப்படாது அங்கேயே தங்கியிருந்தனர் தமது காணி இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்ததால் மாற்று காணிகளே தமக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற நிலைமையை அறிந்த மக்கள் தமக்கு மாற்று காணி வேண்டாம் என்று இடைத்தங்கல் நிவாரண கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமது சொந்த காணியில் குடியேற்றுமாறு நான்கு வருடங்கள் முகாமில் வாழ்ந்தனர்

இந்நிலையில் 2012 ம் ஆண்டு 09 ம் மாதம் 24 ம் திகதிக்கு முன் இலங்கையில் உள்ள  முகாம்களை மூடப்பட்டு அனைவரும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும்  என்ற ஜெனீவா தீர்மானத்துக்கு அமைய மக்கள் அனைவரும் முகாமில் இருந்து ஏற்றிவரப்பட்ட மக்கள் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் கொண்டுவந்து இறங்கப்படுகின்றனர் தமது சொந்த கிராமத்தில் குடியேறப்போவதாக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் சீனியா மோட்டை பகுதியில் காடுகள் இடிக்கப்பட்ட வெறும் காணிகளில் கொண்டுசென்று விடப்பட்டு அந்த பகுதி கேப்பாபுலவு மாதிரி கிராமம் என பெயர் சூட்டப்பட்டது காலப்போக்கில் அது கேப்பாபுலவு என பெயர் மாற்றப்பட்டுவிட்டது இவ்வாறு தமது சொந்த நிலத்தை இழந்த மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர்

அதனை தொடர்ந்து 2016.01.05  ம் திகதி முதலாவதாக கேப்பாபுலவு கிராமத்தில் 6 குடும்பங்களின் வாழ்விட காணியும் 6 குடும்பங்களின் விவசாய செய்கை காணியுமாக 12 பேருடைய 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது

தொடர்ந்து காணிகள் விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை இல்லாத காரணத்தால் 2016.03.24  ம் திகதி கேப்பாபுலவை சேர்ந்த ஆறுமுகம் வேலாயுதபிள்ளை கேப்பாபுலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் இந்த போராட்டம் தொடர்ந்தபோது அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் 3 மாத கால அவகாசம் கோரி 2016.03.28 ம் திகதி போராட்டத்தை முடிவுறுத்தினார் அந்த 3 மாதங்களிலும் எந்த முடிவும் இல்லாது இருந்து    2017.01.25ம் திகதி சூரிபுரம் கிராமத்தில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து சென்ற   50 குடும்பங்கள் உள்ளடங்கலாக   26 குடும்பங்கள் அதிகரித்து  76குடும்பங்களாக  30 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்

இதனை தொடந்து ஏனைய காணிவிடுவிப்புக்கள் இல்லாது போக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதியின் கையால் பிலக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டது அது நடைபெறாத குழப்பநிலையில் 2017.01.31 ம் திகதி காணிகளுக்குள் செல்ல சென்ற பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையால் தடுத்து நிறுத்தப்பட மக்கள் முகாம் வாசலில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்

போராட்டம் பல்வேறு தரப்புக்களின் ஆதரவுடன் வீச்சு பெற்று 2017.03.01 ம் திகதி பிலக்குடியிருப்பில் 76 பேருடைய 42 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட 8 குடும்பங்களின் 4 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இன்றும் காணப்படுகிறது இந்நிலையில் ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயிலில் 2017.03.01  மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது மக்களது போராட்டம்

போராட்டம் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் 2017.03.18 ம் திகதி சீனியாமோட்டை பகுதியில் 22 குடும்பங்களது மேட்டுக்காணிகளும் வயற்காணிகளுமாக மொத்தமாக 45 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து கேப்பாபுலவில் 2 ம் கட்டமாக மீள்குடியேற்ற அமைச்சால் இராணுவ தரப்பிக்கு 5 மில்லியன் ரூபா வழங்கி 12பேரினுடைய 140 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

அதனை தொடர்ந்து கேப்பாபுலவில் 3 ம் கட்டமாக மீள்குடியேற்ற அமைச்சால் இராணுவ தரப்பிக்கு 148 மில்லியன் ரூபா வழங்கி 65பேரினுடைய 111 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு மக்களிடம் காணிகள் கையளித்துள்ள இராணுவத்திடம் மக்கள் தொடர்ந்தும் போராடி கோருவது தமது பூர்விக நிலங்களை விட்டு அரச காணிகளில் சென்று இருக்குமாறு கோரியே எனவே அவர்கள் கூடும் 4 நபர்களுடைய பெருந்தோட்ட காணிகள் 100 ஏக்கரையும் 100குடும்பங்களது வாழ்விட காணி 71 ஏக்கரையும் சேர்த்து 104 குடும்பங்களது 171 ஏக்கர் காணிகள் விடுவிப்போடு தீர்ந்துவிடும் கேப்பாபுலவு பிரச்சனை ஒட்டுமொத்த பிரச்சனை  இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்

சண்முகம் தவசீலன்.

Comments
Loading...