Designed by Iniyas LTD
சென்னை சூப்பர் கிங்ஸ் – லாகூர் லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன
சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன. டொல்பின்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் சென்னை அணி உள்ளது.
இதில் சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டொல்பின்ஸ் பந்துவீச்சை சிதறடித்த ரெய்னா 90 ஓட்டங்கள் விளாசினார். அதனால் இன்றைய போட்டியிலும் இவரது அதிரடி தொடரலாம்.
மேலும் டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் சிறந்த தொடக்கம் கொடுத்தால் சென்னை அணியின் ஓட்டங்களை அதிகப்படுத்தலாம். நடுவரிசையில் டுபிளசி, அணித்தலைவர் டோனி, ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.
வேகப்பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா, மோகித் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். கடைசி கட்டத்தில் டுவைன் பிராவோ ‘வேகத்தில் ’பலம் சேர்க்கிறார். ‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணி சென்னை அணிக்கு பலத்தை அதிகரிக்கிறது.
லாகூர் லயன்ஸ் அணி தனது முதல் போட்டியில் கோல்கத்தாவிடம் வீழ்ந்தது. துடுப்பாட்டத்தில் அகமது சேஷாத், அணித்தலைவர் முகமது ஹபீஸ், சாத் நசிம், உமர் அக்மல் நம்பிக்கை தருகின்றனர்.
வேகப்பந்துவீச்சில் சீமா, வகாப் ரியாஸ், ஆசிப் ராஜா, இம்ரான் அலி கைகொடுக்கின்றனர். துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய சென்னை அணியை சமாளிக்க திறமையான பந்து வீச்சு லாகூர் அணிக்கு அவசியமாகிறது.
அதே சமயம் சென்னை அணித்தலைவர் டோனி, பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை என தெரிவித்திருந்தார். அதனால் சிறப்பாக பந்து வீசும் போது லாகூர் அணியின் ஓட்டங்கள் குவிப்பை சென்னை அணியால் கட்டுப்படுத்த முடியும்.