தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய கல்விக் கொள்கையால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது – பிரகாஷ் ஜவடேகர் உறுதி

javadekarமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், மேலும் கூறியதாவது:

பள்ளிகளில் காலை நேர வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கையால், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது. மாறாக, மாநில அரசுகளை சக கூட்டாளியாகக் கருதி மத்திய அரசு பங்காற்றி வருகிறது. கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.

இதற்கு முன்பு, 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை, 1992-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்ட பிறகு இந்தக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார் ஜாவடேகர்.

புதிய கல்விக் கொள்கையால் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்று உறுப்பினர்கள் கேட்டதற்கு, “”சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் எந்தப் பள்ளியும் கவலைப்படத் தேவையில்லை” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், கல்வி காவிமயமாக்கப்படுகிறதா? என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜாவடேகர் பதிலளிக்கவில்லை.

5.5 லட்சம் ஆசிரியர்கள்: நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மற்றொரு கேள்விக்கு ஜவடேகர் பதிலளித்தார்.

Comments
Loading...