தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளி நகுலேஸ்வரனின் படுகொலை – அச்சத்தில் முன்னாள் போராளிகள்

வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணையை பொலிசார் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய, சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,sivashakthu-ananthan

நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.

எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Comments
Loading...