Designed by Iniyas LTD
அகதிகளை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய யூனியன் அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
அடைக்கலம் கோரி ஐரோப்பாவிற்குள் வந்துள்ள ஒரு லட்சத்து 20ஆயிரம் அகதிகளை உறுப்பு நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய யூனியன் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பை அடுத்து ஐரோப்பிய கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதரவற்ற நிலையில் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பை வேண்டி இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் கோரி நுழைந்துள்ள மக்களை பரவலாக அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் நிர்வாக அமைப்பு இதனை நடைமுறைப்படுத்தும் பணியைச் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் முடிவை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய பிராந்தியத்திற்குள் நுழைந்துள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.