தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அண்டை நாட்டின் தலைவரை மோசமாக சித்தரித்து சிறீ.இணையத்தில் கட்டுரை

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டின் தலைவரை இவ்வளவு மோசமாக சித்தரித்து, மற்றொரு நாடு, தன்னுடைய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இவ்வாறு வெளியிட்டிருப்பது, சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்துவோம் என்று தற்போதைய மத்திய அரசும் கூறி வரும் சூழ்நிலையில், நமது நாட்டுத் தலைவர்களை இப்படி மோசமாக இலங்கை அரசின் இணையதளம் விமர்சித்திருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.jayalalitha

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்களை கொள்ளையடித்துச் செல்வது எந்த வகையில் நியாயமானதாகும்? தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.

இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? 1876ம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும், 1924ம் ஆண்டு முதல் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள விஷயங்களில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது மட்டுமே ஏற்க கூடிய விஷயம். மற்றபடி கச்சத்தீவு பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று நேற்றல்ல, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வந்திருக்கின்றனர். இடையில் அந்த தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்து விட்டதாலேயே, தமிழக மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டதாக கருத முடியாது. கச்சத்தீவை கொடுத்ததே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வாறு கொடுத்தது தவறு; அதை மீட்க வேண்டும் என்றே தற்போது தமிழக தலைவர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்குவதும், அவர்களுடைய வலைகளைக் கிழித்தெறிந்து, படகுகளை சேதப்படுத்துவதும் எந்த சர்வதேச சட்டப்படி சரியாகும்? நமது விரோதி நாடு என கூறப்படும் பாகிஸ்தான் கூட, நமது மீனவர்களிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதில்லை.

எல்லாம் சரி. அவர்கள் கூறுவது எல்லாமே நியாமானதாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக மற்றொரு நாட்டுத் தலைவரை இப்படியா இழிவாக சித்தரிப்பது? தன் மாநில மீனவர்களைக் காப்பாற்றுமாறு ஒரு முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுவதை இப்படியா கொச்சைப்படுத்தி விமர்சிப்பது? ஒரு அரசின் இணையதளத்தில் இவ்வளவு மோசமான விமர்சனம், அதுவும் முதல் பக்கத்தில் வெளியிட்டிருப்பது வேதனை தருவதாக உள்ளது. மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் இவ்வாறு ஒரு வாசகரின் கட்டுரையை வெளியிட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? இலங்கை அரசின் இந்த அநாகரிக போக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல. சர்வதேச சமுதாயமே கண்டிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

Comments
Loading...