தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிகாரத்திலுள்ளவர்களுக்கு ஒரு நியாயம்? யாழ். பல்கலை மாணவர்களுக்கு வேறொரு நியாயமா? – பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி..

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்று(03)இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு ஒரு நியாயம்? யாழ். பல்கலை மாணவர்களுக்கு வேறொரு நியாயமா? என யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டிப் பேசியிருந்தார்.

அதுமாத்திரமன்றி சிங்களத் தலைவர்கள் மற்றும் பெளத்த குருமார்கள் என பலரும் தலைவர் பிரபாகரன் குறித்துப் பெருமையாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யாழ் பல்கலைகழகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள் ,   தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டதாக  கூறி மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டமை எந்த விதத்தில் நியாயம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக கண்காணிக்க வேண்டிய நிலையில் அநாவசியமாக விடுதலைப் புலிகளுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சம்பந்தப்படுத்தி அவர்களைக் கைது செய்து விசாரிப்பதென்பது முற்றுமுழுதாக மனிதாபிமானத்திற்கும்,சட்டத்திற்கும் முரணான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கெதிராக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் குரலை நசுக்குவதன் மூலம் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் மற்றும் தமிழ்மக்களின் தீர்வுக் கோரிக்கைகளை நசுக்குவதற்கான முனைப்பாகவே பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கையை தான் கருதுவதாகவும் கிருஸ்ணமீனன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் படங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்க முயல்கிறார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...