Designed by Iniyas LTD
அதிக கோல்கள் அடித்த பட்டியலில் நெய்மருக்கு ஐந்தாவது இடம்
ஒரு போட்டியில் 4 கோல்கள் அடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. இதில் பிரேசிலின் 4 கோல்களையுமே நெய்மர் தான் அடித்தார்.
இதன்மூலம் பிரேசிலுக்காக ஒரு போட்டியில் 4 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நெய்மரும் இடம் பிடித்துள்ளார். இவர் 40 கோல்களுடன் (58 போட்டிகளில்) அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் 5வது இடத்தில் உள்ளார்.
பீலே (77 கோல்), ரொனால்டோ (62 கோல்), ரொமாரியோ (55 கோல்), ஜிகோ (48 கோல்) ஆகியோர் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் முதல் 4 இடங்களில் உள்ளனர். ஜப்பான் அணிக்கு எதிராக அசத்திய நெய்மர் இதுபற்றி கூறுகையில், ஜப்பான் அணிக்கு எதிராக 4 கோல்களை அடித்தபோது வியந்துபோனேன்.
இதன் மூலம் 4 கோல் அடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவானபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். முன்னதாக 2000ல் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் 4 கோல் அடித்த பிரேசில் வீரர் ரொமாரியோ எப்போதுமே எனது முன்மாதிரி.
அதற்கு என்ன காரணம் என்றால் பார்சிலோனா அணிக்காக விளையாடிய ரொமாரியோ, எண்-11 பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்தார். அதே எண் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை தான் நான் இப்போது (பார்சிலோனாவுக்காக) அணிந்து விளையாடுகிறேன் என்று கூறியுள்ளார்.