Designed by Iniyas LTD
அதிமுகவுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: சரத்குமார்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுசெயலர் எஸ்.வி.கணேசன், மாநில கலை இலக்கிய அணி செயலர் விவேகானந்தன், வழக்குரைஞரணி செல்வம், மாநில மகளிரணி துணைச் செயலர் பாகீரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். எங்களுடைய கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இடங்களை கேட்க உள்ளோம்.
அதிமுக அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சியின் 10ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரின் பதிவை புதுப்பிக்கும் பணி வரும் 28ஆம் தேதி முதல் 10 நாள் நடைபெறுகிறது. கட்சி நிர்வாகிகள் இயக்கப் பணிகளை மேற்கொள்வது, பொதுமக்களுக்கு சேவை செய்வது குறித்தும், தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் மாதத்தில் மூன்று நாள்கள் சென்னையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர். இதற்கு முன்னதாக, தென்மண்டல செயலர் சுந்தர் வரவேற்றார்.