தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமூகக் குமுறல்களின் வெளிப்பாடே ஜோக்கர் திரைப்படம்: பழ. நெடுமாறன்

201607081016366279_Pazha-Nedumaran-Says-All-temples-want-to-worship-Tamil_SECVPF.gifசமூகக் குமுறல்களின் வெளிப்பாடே ஜோக்கர் திரைப்படம் என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளி வாய்க்கால் முற்றத்தில், முள்ளி வாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜோக்கர் திரைப்பட திறனாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழ்ச் சமூகம் எல்லா வகையிலும் சீரழிந்து வருகிறது. இந்தச் சமூகத்தை மீட்பதற்கு ஜோக்கர் போன்ற படம் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறேன். ஊடகம் என்பது வலிமையான ஆயுதம். இந்தத் தமிழ்ச் சமூகத்தை சீரழிவுக்கு ஆளாக்கிய ஊடகம், இப்போது இச்சமூகத்தை மீட்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏராளமான இளம் இயக்குநர்கள் வருகின்றனர். சமூகக் கண்ணோட்டத்துடன் படம் எடுக்கின்றனர். கதாபாத்திரம், நடிப்பு, காட்சி மூலம் சமூகத்துக்கு என்ன, எப்படி சொல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு படம் எடுக்கப்படுகிறது. எனவே, சமூகம் சீரழிவிலிருந்து மீட்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

உலகத் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற கொரிய திரைப்படம், அந்நாட்டின் நாகரிகம், இசை, பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அதனால், உலக அளவில் அப்படம் முதல் பரிசை வென்றது. நம்முடைய கதாநாயகர்கள் ஆங்கில இசைக்கு ஆடி, பாடுகின்றனர்.

இன்றைய இயக்குநர்கள் இந்த மண்ணின் மணம் கமழும் படத்தை எடுக்கின்றனர். சமூக அவலங்களையும், புரையோடிப் போன சீரழிவுகளையும் படமாக்குகின்றனர்.

நம் சமூகத்தின் சிறப்பை எடுத்துக் கூறினால்தான், உலக அரங்கில் நம்முடைய படம் பேசப்படும். சமூகக் குமுறல்களின் வெளிப்பாடாக ஜோக்கர் படம் உள்ளது. இதுபோன்ற நிறைய படங்களை இயக்குநர் ராஜூ முருகன் எடுக்க வேண்டும். அவையெல்லாம் இச்சமூகத்துக்குப் போய்சேர வேண்டும் என்றார் நெடுமாறன்.

Comments
Loading...