Designed by Iniyas LTD
அனைத்து மதுக்கடைகளும் மூடும் வரை போராட்டம் தொடரும்!
கோவை பெரியகடை வீதி-சலீவன்வீதி சந்திப்பு அருகே காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாநிலபொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். முதற்கட்டமாக 500 கடைகளை மூடியதுடன், கடைகள் செயல்படும் நேரத்தையும் குறைத்தார்.
இதனால் தமிழகத்தில் ஒரு சதவீத மதுவிற்பனையே குறைந்துள்ளது. தற்போது கோர்ட்டு உத்தரவின்பேரில் தான் 1000 மதுக்கடைகளை மூடுவதற்காக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மதவழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடினால் எவ்வித மாற்றமும் இருக்காது. மக்களுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் அகற்றும் வரை பா.ஜனதா போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கையில் பூட்டு, இரும்பு சங்கிலியுடன் பாரதீய ஜனதாவினர் மதுக்கடையை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் காரணமாக டாஸ்மாக் கடை சிறிது நேரம் அடைக்கப்பட்டது.