Designed by Iniyas LTD
அனைவரும் ஒற்றுமையோடு வாழ்வோம்! மைத்திரி அழைப்பு
நாட்டைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும். நாட்டை ஒன்றுபடுத்துவதென்பது அனைத்து மக்களை ஒன்றுபடுத்துவதேயாகும். ஆகவே, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.
சாரணர் இயக்கத்தின் தேசிய ஜம்போரி ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் தேசியக்கொடி ஏற்றலுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சாரணர் கொடி ஏற்றப்பட்டதோடு மாவட்ட ரீதியிலான சாரணர் கொடிகளும் ஏற்றப்பட்டு ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகளுக்கு உத்தியோக பூர்வ சாரணர் இயக்கத்தின் இலங்கைக்கான ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நட்ராஜன், மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேச சாரணர் தினத்தை நினைவு கூர்ந்து தேசிய சாரணர் ஜம்போரியை வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றீர்கள். அதில் பங்கேற்பதில் நான் மகிழ்சியடைகின்றேன். விசேடமாக யாழில் இவ்வாறான நிகழ்வொன்றை முன்னெடுத்தமைக்காக அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் அணிவகுத்து நிற்கும் சாரணர்களை பார்க்கும் போது நான் சிறுவான இருந்த காலத்தில் சாரணர் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமை நினைவுக்கு வருகின்றது. இற்றைக்கு 48 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பொலநறுவையில் சாரணர் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டிருந்தேன்.
சாரணர் இயக்கம் சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது. இதற்கு உலகில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. நானும் சாரணராக பணியாற்றியதாலோ என்னவோ தற்போது நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியினை வகிக்கின்றேன். சாரணர் அமைப்பில் தம்மை இணைத்துள்ள பிள்ளைகளில் தான் எமது நாட்டின் எதிர்கால ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சாரணர்களைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயமொன்றை கூறவேண்டும். சாரணர்கள் மனிதாபிமானம், அன்பு, ஆதரவு, இரக்க குணங்களை உடையவர்கள். பொறாமை, கோபம், குரோதம், வைராக்கியம் ஆகிய குணங்கள் சாரணர்களிடத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.
எமது நாட்டில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு சாரணர் இயக்கம் எதிர்காத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சாரணர் இயக்கம் உறுதுணையாக நிற்கும்.
சாரணர் இயக்கத்தில் இன,மத,குல, வேறுபாடுகள் கிடையாது. உலகம் பூராகவும் 42 மில்லியனுக்கு அதிமானவர்கள் சாரணர் இயக்கத்தில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
சாரணர்கள் பிறருக்கு உதவிகளை வழங்குவதையும், தேவைகளை நிறைவேற்றுவதையும் பிரதானமான செயற்பாடுகளாக கொண்டிருக்கின்றார்கள். அதனால் சாரணர் இயக்கத்தின் பெறுமதி என்றுமே குறைவடைவதேயில்லை. சாரணர் இயக்கமானது இந்து, பௌத்த மதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.
நாட்டைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும். நாட்டை ஒன்றுபடுத்துவதென்பது அனைத்து மக்களை ஒன்றுபடுத்துவதேயாகும். ஆகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்.
இந்த சாரணர் ஜம்போரியில் கலந்து கொண்டுள்ள பிள்ளைகளை பாருங்கள். அவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. அவர்களிடத்தில் வேறுபாடுகள் இல்லை. ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். கோபம், பொறாமை, வைராக்கியம், குரோதம் எதுமேயில்லாது இருக்கின்றார்கள்.
சாரணர் இயக்கத்தை மேலும் மேம்படுத்துச் செல்ல அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை வலுவுள்ளதாக்க அரசாங்கம் என்ற வகையில் அனைத்து விதமான உதவிளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். அவர்களது வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கும் தயாரகவுள்ளேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
யாழில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த தேசிய சாரணர் நிகழ்வில் தெற்கில் உள்ள பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கின்றனர். வடக்கில் உள்ள பிள்ளைகள் தெற்கிலுள்ள பிள்ளைகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். அனைத்துப்பிள்ளைகளுக்கும் ஒரே இரத்தம் தான் காணப்படுகின்றது. இவர்களை முன்னுதாரணமாக் கொண்டு அனைவரும் ஒன்றுபடவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
சாரணர்களை உருவாக்குவதில் ஆசியர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் பாடசாலையில் செலவிடும் நேரத்திற்கு அப்பால் அதிகமான நேரத்தை செலவிட்டு அர்ப்பணிப்புடன் சாரணர்களை உருவாக்கின்றார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை என்றுமே பாரட்டப்படவேண்டியது.
உலகின் எந்தவொரு பாகத்திலும் சாரணர் இயக்கத்தின் மீதோ சாரணர் மீதோ எவ்விதமான விமர்சனங்களும் இல்லை. சாரணர்கள் வஞ்சகர்கள், கொலைகார்கள், ஊழல்மோசடிக்கார்கள் என குற்றம் சாட்டப்படுவதில்லை. சிறந்த மனிதாபிமானமுள்ளவர்களாகவே மதிக்கப்படுகின்றார்கள். அதனால் சாரணர்களின் பெறுமானம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. நாட்டின் எதிர்காலத்தற்கு மனிதாபிமானமிக்க உயர்ந்த குணமுடியவர்கள் இன்றியமையாதவர்களாக காணப்படுகின்றார்கள் என்றார்.