Designed by Iniyas LTD
அம்பாறையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் பாரிய கவனவீர்ப்பு போராட்டம்
ஐ நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் 40 ஆவது அமர்வு நாளை ஆரம்பமாவதையிட்டு அம்பாறை திருக்கோவிலில் பாரிய கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 24 ஆம் திகதி அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டமானது திருக்கோவில் 01 வாகீஸ்டர் வீதியில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க காரியாலயத்திலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரம் வரையில் அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அந்தவகையில் நாளை ஆரம்பிக்கவிருக்கும் ஐ நா சபையின் 40 வது அமர்வின் போது இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் நீதியான உள்ளகப்பொறிமுறையில் விசாரணைகள் இடம்பெறவேண்டாம், யுத்தக்குற்றங்கள் சரியான முறையில் விசாரிக்கப்படவேண்டும், சர்வதேசமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், காணாமல் போன எமது உறவுகள் எங்கே என போராட்டக்காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை மீது அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அடங்கியுள்ள போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறும் விடயம் தொடர்பில் இலங்கை, சர்வதேசத்தையும் தம்மையும் ஏமாற்றியதாக கருதும் வடகிழக்கு வாழ் மக்கள் நாளை 25 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐநா அலுவலகம் நோக்கி மாபெரும் கவனவீர்ப்பு போராட்டமொன்றை வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





