தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடுவது குற்றம் என்றால் எப்படி போராட வேண்டும்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராஜா தாக்கப்பட்ட சம்பவமானது, ஜனநாயகப் போராளிகளின் அகிம்சை வழி செயற்பாடுகளை அடக்க நினைக்கும் அரசாங்கத்தின் கட்டு மீறிய செயலாகும் எனவும் இச்சம்பவத்தை தாம் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அவர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,slt-selvam-adaikalanathan

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடுவது குற்றமான செயல் என்றால் எப்படி போராட வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது. புலிகள் மீள உருவாகின்றார்கள் என கண்ணுக்கு தெரியாத சம்பவங்களை வைத்து சந்தேகத்தில் பலரை கைது செய்து சிறைகளில் அடைக்கும் அரசாங்கம் இது போன்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?

அரச தரப்பிற்கு தமது விசுவாசத்தை காட்டுகின்றவர்கள் குற்றச்செயல்களில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ளுகின்றனர். அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை யாராலும் திட்டமிட்டு செய்திருக்க முடியாது.

எனவே அரசாங்கம் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராஜா மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...