Designed by Iniyas LTD
அரசு கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்த கோரிக்கை
சிவகங்கையில் உள்ள அரசு கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்துமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
50 ஆயிரம் முதல் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் படி தொழிற்சாலையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை அருகே கோமாளிபட்டி முதல் பூவந்தி வரை, சுமார் 25 கிலோ மீட்டர் பரப்பளவில் கிராபைட் கண்டறியப்பட்டது. 1971ல் கிராபைட் கிடைக்கும் 960 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அரசு, கோமாளிப்பட்டியில் கிராபைட் தொழிற்சாலையை அமைத்தது.
இந்த தொழிற்சாலையில், சுரங்கத்திலிருந்து கிராபைட் வெட்டி எடுத்தல், சுத்திகரிப்பு செய்தல், கிராபைட்டை பயன்படுத்தி உபத்தொழில்கள் தொடங்குதல் ஆகிய மூன்று கட்டமாக விரிவுப்படுத்தப்படும் என 1981 ஆண்டு அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். கடந்த 1999 ஆண்டு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு, 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக, அரசு அறிவித்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. சுத்திகரிக்கப்படும் கிராபைட் அனைத்தும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
எனவே கிராபைட் தொழிற்சாலையை விரிவுப்படுத்தி அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராபைட் தொழிற்சாலைக்காக நிலம் கொடுத்த சுற்றுப்புற கிராம மக்கள், வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடி வருவதாகவும், விளை நிலங்களை இழந்த விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டில், கிராபைட்டை மூலப்பொருளாக கொண்டு தொடங்கப்பட வேண்டிய தொழிற்சாலைகள் குறித்து, திட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்ட அறிக்கை, கிடப்பில் போடப்பட்டதாக, வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.