தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரவக்குறிச்சி – தஞ்சை தொகுதி தேர்தல் பண விநியோகத்தால் தான் ரத்தானது – கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-mk

 கேள்வி:- அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி?

பதில்:- ரத்து செய்யப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், இந்த நிகழ்வுகளில் தேர்தல் ஆணையம் சட்டப்படி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நாட்டு மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொன்னால் தானே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பெருமளவுக்கு நடந்த பண விநியோகம் தான் தேர்தலை ரத்து செய்யக்காரணம்; வேறு யாருக்கும் அனுசரணையாகவோ, உதவுவதற்கோ இந்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை; ஓட்டுக்குப் பணம் என்பதை எப்படியும் தடுத்தே தீருவோம்; என்பனவற்றின் மீது உண்மையில் எல்லோருக்கும் நம்பகத்தன்மை ஏற்பட முடியும்! முதல் முறை-முதல் முறை என்று சொல்லிக்கொள்வதற்கும் அப்போதுதானே பொருள் இருக்கும்!

கேள்வி:- முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப்பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப்பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளனர். அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்சினை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்” என்று பினராயி விஜயன் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவிகித தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்களே?

பதில்:- காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட மொத்தம் 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; அதுவே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கக் காரணமாகி விட்டது; எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தி.மு.க.வுக்குப் பேரிழப்பாக முடிந்து விடுகிறது-என்று தி.மு.க. செயல்வீரர்கள் விவாதித்துக் கவலை கொண்டிருப்பதாக, ஒரு சில நாளேடுகளும் ஊடகங்களும் கருத்து தெரிவித்து, கலக விதை ஊன்றி வருகின்றன.  ஆங்கில நாளேடுக்கு நான் அளித்த பேட்டியில், “தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன; இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்டணிக் கட்சிகளை நான் சிறிதும் குறை கூற விரும்பவில்லை.

அந்தத் தொகுதிகளில் தி.மு.க. உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச்செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்” என்று நான் சொன்னதை மறைத்து, தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.  இந்த “சேவை”யில் மத்திய அரசின் உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை ஆங்காங்கே ஊன்றி வருவதாகவும் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது.  அவர்களுடைய நோக்கமெல்லாம், தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை உருவாக்கி, ஊதிப்பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்;

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட வேண்டும்; அதே நேரத்தில், பா.ஜ.க. வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர லாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பது தான். இதனைத் தி.மு.க.வின் தொண்டர்களும், கூட்டணிக்கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...