Designed by Iniyas LTD
ராதாபுரம் தொகுதியில் தபால் ஓட்டுக்கள் எண்ணாமல் தவறான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.அப்பாவு, தமிழக தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கொடுத்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- 
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நான் வேட்பாளராக களம் இறங்கிய ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது, 19-வது சுற்றில் தகவல் பலகையில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் போடப்பட்டது. அப்போது தபால் ஓட்டுகள் எண்ணவில்லை. பின்னர் நானும் என்னுடன் இருந்த முகவர்களும் வாக்கு எண்ணும் அறைக்கு வெளியே வீசப்பட்டோம். நாங்கள் இல்லாததை பயன்படுத்தி 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளும், தபால் ஓட்டுகளும் எண்ணி தவறான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் 599 வாக்குகள் அதிகம் பெற்ற என்னை வெற்றிபெற்றதாக அறிவிக்காமல், 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் இன்பத்துரையை அறிவித்து விட்டனர். அனைத்து உண்மைகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அந்த 3 சுற்று ஓட்டு பதிவு மற்றும் தபால் ஓட்டுகளை மீண்டும் சரியாக எண்ணி சரியான முடிவு அறிவிப்பதற்கு நீதிமன்றம் செல்ல உள்ளேன். இதற்கு சி.சி.டி.வி. கேமராவில் பதிவான முழு பதிவுகள் உள்பட சில விவரங்களை விரைவாக கொடுத்து உதவ வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.