Designed by Iniyas LTD
அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டதாக தி.மு.க.வை பற்றி ஜெயலலிதா பேச்சு
அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டதாக தி.மு.க.வை பற்றி பேசுவதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கள்ளக்குறிச்சியில் 16–ம் தேதி பேசிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘‘மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க.’’ என்று அவருக்கே உரிய பாணியில் நம் மீது பழி சுமத்தியிருக்கிறார். அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல், விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து வருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் தி.மு.க. ஊழல் புரிந்ததாக வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த காலத்தில், அவர் மீது, அவருடைய ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவை நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகளும் கூறப்பட்டன.
ஜெயலலிதா மீது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல வழக்குகளில் தங்கள் கருத்துகளை, தீர்ப்புகளை அவ்வப்போது வழங்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட ஒருசில வழக்குகளை மேல் முறையீடு செய்து, அந்த தண்டனையில் இருந்து அவர் விடுதலை பெற்ற சில நிகழ்வுகளும் உண்டு. பல்வேறு நீதிமன்றங்களில், பல நீதிபதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை பெற்ற ஜெயலலிதா, தி.மு.க.வின் மீது அலைக்கற்றை ஊழல் என்றெல்லாம் ஊருக்கு ஊர் சென்று பேசுவது என்பது ‘‘சாத்தான் வேதம் ஓதுவதைப்போல்’’ இருக்கிறதா? இல்லையா?.இனியும் அவர் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்த வழக்குகளைப் பற்றிய முழு விவரங்களும், அந்த வழக்குகள் விசாரணைகளின் போது என்னென்ன நடைபெற்றது என்ற விவரங்களும் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்குமார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.அதைத்தொடர்ந்து நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அடித்து நொறுக்கியதில், 20 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற தொ.மு.ச. தலைவர் திருமாவளவனையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்.
துப்பாக்கி சூட்டில் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசினால் இதுவரை அறிவிக்கப்பட வில்லை.
உடனடி அரசு நிர்வாகத்தில் இருப்போர் நெய்வேலியில் அமைதி திரும்புவதற்கும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, முதல்–அமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக ஆயிரக்கணக்கான போலீசாரைக்கொண்டு வந்து குவிக்கும் காவல்துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத்தை களையவும் முன்வர வேண்டுமென்று வற்புறுத்துகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.