Designed by Iniyas LTD
அல்கொய்தா அமைப்புக்கு உதவியவருக்கு 40 வருட சிறை!
வியட்னாம் வம்சாவளி வாலிபரான மின் குவாங் பாம் (வயது 33) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தார். அரேபிய தீபகற்பத்தில் இயங்கி வரும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நியூயார்க் நகர நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது.
ஏமனில் பல மாதங்கள் பயிற்சி பெற்ற மின் குவாங், அல்கொய்தா தலைவர் அன்வர் அல்-அவ்லக்கியின் உத்தரவின் பேரில் ஹீத்ரூ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
எனினும் அல்கொய்தாவுக்கு பொருளுதவி அளித்தது, அவர்களிடம் இருந்து தீவிரவாத பயிற்சி பெற்றது, எந்திர துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளை கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மின் குவாங் பாமுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நியூயார்க் நீதிபதி அலிசன் நாதன் உத்தரவிட்டார்.