தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அ.தி.மு.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தீபா விளக்கம்

deepaஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

முன்னாள் நிர்வாகிகளும் பலர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.தினமும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டு முன்பு குவியும் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

தினமும்  மாலையில் தொண்டர்கள்  மத்தியில் பேசுகிறார். ‘நம்பி வரும் தொண்டர்களை கைவிட மாட்டேன்.  வருகிற 24-ந்தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) அரசியல் பயணத்தின் அறிவிப்பை வெளியிடுவேன்’ என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் அ.தி.மு.க. மேலிட தலைவர்கள் சிலருடன் தீபா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் அவர்களை இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.
இதை தீபா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் நானாகவே இருக்கிறேன். நான் அ.தி.மு.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறு. அடிப்படை ஆதாரமற்றது.
எனது வீட்டின் முன்பு தினமும் மணிக்கணக்கில் திரண்டு நிற்கும் தொண்டர்களை பார்க்கிறேன். என்னை நம்பி வரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்றார்.

தீபா பேரவை சார்பில் பொள்ளாச்சியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வி.பி.சந்திரசேகர், மலரவன், ரோகிணி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரங்கல் கூட்டத்தில் மலரவன் பேசும்போது, “தற்போது முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சிசெய்துவருகிறார். அவருக்கே பொதுச்செயலாளர் பதவியை வழங்கியிருக்கலாம். ஆனால், அதுபோன்று நடைபெறவில்லை. ஆகவே, ஜெயலலிதாவின் எண்ணங்களை கொண்ட தீபாவை நாங்கள் ஆதரித்து வருகிறோம். தீபாவின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று திரண்டுள்ளோம்” என்றார்.

வேலூர் மாவட்ட ஜெயலலிதா தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் கூட்டம் திருப்பத்தூர் லலிதா திருமண மண்டபத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஜெ.தீபா பேரவை வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபா பேரவையில் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தீபா தலைமை ஏற்க வேண்டும் என மதுரை, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மாவட்டம் முழுவதும் ஒருங் கிணைப்பை ஏற்படுத்தி வருகிறோம்.

வேலூர் மாவட்டத்தில் தானாகவே போட்டோ மற்றும் அடையாள அட்டையுடன் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. 1 கோடி உறுப்பினர்களுடன் சென்று தீபாவிடம் வழங்கி தலைமை ஏற்க அழைக்க உள்ளோம்.மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் தீபா காட்டாற்று வெள்ளம் அல்ல. சுனாமி.  இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments
Loading...