Designed by Iniyas LTD
ஆனையிறவு பகுதியில் காணி அளவீடு முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் – மாதகல் திருவடிநிலை மற்றும் கிளிநொச்சி – ஆனையிறவு பகுதிகளில் நில அளவீடுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாதல் திருவடிநிலைப் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்குச் சொந்தமான 27 ஏக்கர் காணியை அளவீடு செய்ய நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நில அளவை நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்கள். அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மாதகல் திருவடிநிலைப் பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர். எனினும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு மேற்கொள்ளவதற்கு அங்கு வருகைத்தரவில்லை எனவும், மறுஅறிவித்தல் வரை நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக காணியை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு பேருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணியை கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி அளவீடு செய்ய முயற்சித்தபோதும் காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினாலும் பிரதேச செயலாளர் வருகை தராமையினாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இன்று காலை ஏழுமணியளவில் வருகை தந்த நில அளவை திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்துள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பம் தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர்கள், வட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர். ஆனையிறவு பகுதியில் காணி அளவீடு முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கையில் இராணுவத்தின் தேவைகருதி இன்றைய தினம் குறிப்பிட்ட பகுதியில் நில அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த அளவீட்டு நடவடிக்கைகளின்போது காணி உரிமையாளர் ஒருவர் எதிர்ப்பு வெளியிட்டபோதிலும், அவரிடம் சட்ட ரீதியாக காணி உரிமையை ஊர்ஜிதப்படுத்தும் ஆவணங்கள் காணப்படவில்லை என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.
இராணுவத்தின் தேவைகருதி அதற்கான காணியை பெற்றுத்தருமாறு ஏற்கனவே காணி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.