Designed by Iniyas LTD
ஆவா குழு இருப்பதாலேயே படையை குறைக்க முடியவில்லையாம்?
யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க முடியாமைக்கு காரணம் சமீபத்தில் ஆவா குழு என்றொரு வன்முறைக்குழு உருவாகியதேயென தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க. இதுபோன்ற குழுக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவம் வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் புலி உறுப்பினர்களில் புனர்வாழ்வுக்கு உட்படாத 300க்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களை தாங்கள் இனம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இந்தியா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து இவர்களை மீண்டும் பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நிதி அனுப்பும் சூழ்நிலையும் இன்னும் இருக்கின்றது. புலம்பெயர் அமைப்புகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பு வைத்திருப்பதும் எமக்குத் தெரியும். எனவே இவர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடாமல் கண்காணிப்பதும் எமது பொறுப்பாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை வலி.வடக்கினில் 4814 ஏக்கர் காணிகளையே இராணுவம் வைத்திருப்பதாகவும் யாழ்.குடாநாட்டில் பலாலி இராணுவ முகாமே மிகப் பெரியதாகும். பலாலியில் மாத்திரம் 3491 ஏக்கர் காணி இராணுவத்தினருக்குச் சொந்தமாக உள்ளது. இதில் 1000 ஏக்கர் பலாலி விமான நிலையத்துக்குச் சொந்தமானதாகும். காங்கேசன்துறை துறைமுகம் இன்று எவருக்கும் பயனற்றதாக காணப்படுகின்றது. 4814 ஏக்கர்களில் வீதிகள் மற்றும் அரச கட்டிடங்களும் காணப்படுகின்றன. இவற்றில் மக்களது காணிகள் பெரும்பாலும் இல்லையென்றே கூற வேண்டும். உண்மையில் கூற வேண்டுமாயின் இந்தக் காணிகளில் சீமேந்துக் கூட்டுத்தாபனக் காணிகளும் உள்ளடங்கியுள்ளன. யாழ்.குடாநாட்டைப் பொறுத்தவரையில் இராணுவத்தினரிடம் 1.67 வீதமான காணிகளே இருக்கின்றதெனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வலி.வடக்கினில் இனிமேல் நிலவிடுவிப்பு சாத்தியமில்லையென்பதை இராணுவத்தளபதி தெளிவுபடுத்தியுள்ளார்.