Designed by Iniyas LTD
இணையத்தள செய்தியால் கடுப்பாகி இருக்கும் கருணாநிதி
திமுக பொருளாளர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் வகையில், அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக உட்கட்சி தேர்தல் அக்டோபர் மாதம் இறுதியில் முடிவடையவுள்ளது. உட்கட்சி தேர்தல் முடிந்த பின், திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, மீண்டும் தலைவர் பதவியை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார்.
பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில் “ஸ்டாலின் பார் 2016” என்ற இணைய தளத்தில் திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்ற ரீதியில், அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தலைமையில், இதற்காகவே ஒரு குழு இயங்கி வருகிறது.
இந்த குழுவில் ஸ்டாலின் மகன் உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மகேஷ் பொய்யாமொழி, அண்ணாநகரை சேர்ந்த திமுக பிரமுகரின் வாரிசு உட்பட, சில இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இளைஞர்கள் நடத்தும் இணைய தளத்தில் வரும் செய்திகளில், திடீரென கருணாநிதியை விமர்சித்து கருத்துக்கள் இடம்பெற ஆரம்பித்தன. கருணாநிதிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை, அவரால் இனி முதல்வராக செயல்பட முடியாது என்பது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றது.
இந்தத் தகவல்கள் கருணாநிதியை சென்றடையவே, அவர் கடும் கோபம் அடைந்துள்ளார். இதற்காகவே, கட்சியில் இணையதள அணி விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
அந்த அணியில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இடம்பெறுவர். அவர்கள், கருணாநிதி மற்றும் கட்சியின் இணையதள செயல்பாடுகளை கவனிப்பர் என கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.