Designed by Iniyas LTD
தி.மு.க. கூட்டணியை பலப்படுத்த அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும்
தி.மு.க. கூட்டணியை பலப்படுத்த அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும் திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடக்கும் தேர்தல்களில் அணுகுமுறையை மக்கள் நலக்கூட்டணி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்தவில்லை. அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொரு விதமான நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. வைகோ தேர்தலை புறக்கணித்து விட்டார்.
இரண்டு இடது சாரி கட்சிகள் யாருக்கு ஆதரவு என்று இதுவரை தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் நெல்லித்தோப்பில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து நேரடியாகவே கடிதம் கொடுத்திருக்கிறது. மத்தியில் ஆளுகிற பா.ஜ.க. கட்சி, தமிழகத்தில் ஆளுகின்ற அ.தி.மு.க. கட்சியை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் வகையில் பல விமர்சனங்களை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜ.க. தனது ஆதரவை தெரிவித்ததின் மூலம் நாட்டு மக்களுக்கு ஓர் உண்மை தெரிந்து விட்டது. அ.தி.மு.க. அணியை பா.ஜ.க. பலப்படுத்தவும், பயன்படுத்தவும் முடிவு செய்து விட்டது என்பதே அது.
தமிழ்நாட்டில் செயல்படும் நல்லாட்சி வரவும், ஜனநாயக மரபு தழைக்கவும், மாநில சுயாட்சி மாண்பு காக்கப்படவும், திராவிட பாரம்பரியத்தின் தலையாய கொள்கையான சமய சார்பற்ற கொள்கை நிலை பெறவும் தமிழக அரசியல் கட்சிகள் தி.மு.க. அணியை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் அமைய ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து ஓர் அணியாக திரண்டு நின்று போராட வேண்டிய காலம் இது என்பதையும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் உணர்ந்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.