தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவுக்கு எதிராக அல் கொய்தா சதி! 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

isis-terroristஇந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அல்கொய்தா அமைப்பினர் 17 பேர் மீது டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முகமது ஆசிப், ஜப்பார் மசூத், முகமது அப்துல் ரகுமான், சையத் அன்சார் ஷா, அப்துல் சமி ஆகிய அல்கொய்தா அமைப்பினர் 5 பேர், 2015 டிசம்பர்-2016 ஜனவரி இடையே கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இந்தியாவில் அல்கொய்தா இயக்கத்தை தொடங்கவும், அதற்காக இளைஞர்களை தேர்ந்தெடுக்கவும், நாட்டுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட சதி செய்ததாகவும் தெரிய வந்தது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேர், மற்றும் தலைமறைவாக உள்ள 12 பேர் என மொத்தம் 17 பேர் மீது டெல்லி போலீசின் தனிப்படையினர், அங்குள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ரிதீஷ் சிங் முன்னிலையில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகள் 18 (சதி செய்தல்), 18-பி ( நாசவேலைகளை செய்வதற்காக ஆள் எடுத்தல்), 20 (போராளிகள் அமைப்பில் உறுப்பினராக இருத்தல்) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த போராளிகள் அமைப்புடன் சமூக ஊடகங்கள், செல்போன்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்ததாகவும், அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும், நிதி உதவிகள் செய்ததாகவும், நாசவேலைகளில் ஈடுபட சதி செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள 12 பேர் மீது ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...