Designed by Iniyas LTD
இந்தியா – பாகிஸ்தான் வன்முறைகளை சரிசெய்ய பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25–ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது.
காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் இந்திய பாதுகாப்பு நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களது குடியிருப்புகள் மீதும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்திய நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து மூன்று நாட்கள் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து நேற்று இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையிலான கொடி கூட்டம் நடைபெற்றது.
இருப்பினும், இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எல்லையில் அமைதியை நிலவ செய்ய, மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எல்லையில் நிலவும் வன்முறைகளை சரிசெய்ய மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் துப்பாக்கி சூடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.