Designed by Iniyas LTD
இந்திய நிறுவனங்களால் தாயக கடல் வளத்தை சுரண்டுவதை எதிர்த்து போராட்டம்!
இந்திய நிறுவனங்கள் எமது பிரதேசங்களில் நேரடியாக இங்கு வந்து கடல் வளத்தினைச் சுறண்டுவதனால் உள்ளூர் பணியாளர்கள் வேலை வாய்ப்பினை இழப்பதை தடுக்குமாறு கோரி பாசையூரில் அமைந்துள்ள கடல் உணவக உற்பத்தி ஏற்றுமதி நிறுவனப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் குறித்த நிறுவனப் பணியாளர்கள் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பவற்றிற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டதுடன் அரச அதிபர் மற்றும் மீன்பிடி அமைச்சு ஆகியவற்றிற்கும் மனுக் கையளித்தனர்.
குறித்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளதாவது ,
இந்திய நிறுவனங்கள் தற்போது எமது பிரதேசங்களில் நேரடியாக வந்து கடல் வளத்தினைச் சுறண்டுகின்றனர். அதாவது யாழ் குடாநாட்டிற்குள் வரும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவே பொருட்களை கொள்வனவு செய்து அதனை தமது நாட்டிற்கு கொண்டு சென்று ஏற்றுமதி செய்கின்றனர்.
இதனால் உள்ளூர் பணியாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றினை தடுக்குமாறு கோருவதோடு அந்த நிறுவனங்கள் தொழில் புரிய விரும்பின் உள்ளூர் வளத்திற்கேற்ப பதிவினை மேற்கொண்டு உள்ளூரிலேயே இயங்க வலியுறுத்தியுமே மேற்படி கவன ஈர்ப்பு போராட்டம். இடம்பெற்றது.
இந்திய இழுவைப் படகுகள் ஒருபுறம் அத்துமீறும் நிலையில் தற்போது ஊருக்குள்ளும் இவ்வாறான புதியவகை நெருக்கடி நிலை ஏற்படுவதனால் அதனை தடுத்து உள்ளூர் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வண்ணம் கோருகின்றோம் என அனைத்து பணியாளர்களும் ஒப்பமிட்டு மனுவைக் கையளித்தனர்.
யாழ் மாவட்ட அரச அதிபருக்கான மனுவினை மாவட்ட மேலதிக அரச அதிபரிடமும் கடற்றொழில் அமைச்சிற்கான மனுவினை மாவட்ட பிரதிப் பணிப்பாளரிடமும் கையளித்தனர்