Designed by Iniyas LTD
இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கவா நல்லிணக்கச் பொறிமுறை செயலணியின் அறிக்கை?

ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது. குறிப்பாக நல்லிணக்க பொறிமுறைமை செயலணியை அமைத்ததின் பின்னணியில் அதுவே உண்டு. சர்வதேச விசாரணையை தவிர்க்கும் பொருட்டும் இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் பொருட்டுமே நல்லிணக்க பொறிமுறைமை செயலணி அமைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அண்மையில் ஸ்ரீலங்கா அரச தலைவரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைமை செயலணி, வடக்கு கிழக்கில் அமர்வுகளை நடாத்திவிட்டு தமது அறிக்கையை அரச தலைவருக்கு கையளித்துள்ளது. இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் பாராட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “உண்மை மற்றும் நீதி குறித்த இலங்கை பிரஜைகளின் அபிலாசைகள் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகின்றது. வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறையின் கீழ் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற செயலணியின் பரிந்துரை மிகவும் முக்கியமானது.” என்ற விடயத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் நல்லிணக்க பொறிமுறைமை செயலணி அமர்வுகளை நடத்தியபோது மக்கள் வலியுறுத்திய பல விடயங்கள் அறிக்கையில் காணாமல் போயுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி மாநிலத்திற்கு தமிழீழம் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று மக்கள் கோரியிருந்தனர். வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்பது காலம் காலமாக தமிழ் தலைவர்களாலும் சிங்கள தலைவர்களாலும்கூட முன்வைக்கப்பட்ட தீர்வே.
இது புதிய விடயமல்ல. இதனையே அரசிடம் தற்போதைய தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. தமிழ் மக்கள் நல்லிணக்க பொறிமுறைமை செயலணி அமர்வுகளில் வலியுறுத்திய கூர்மையான விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் சர்வதேச விசாரணையையே தமிழ் மக்கள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் செயலணியோ, சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய கலப்பு விசாரணையை பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியிருந்தது. அத்துடன் எமக்கு நடந்த இனப்படுகொலை குறித்து நீதியான சர்வதேச விசாரணை தேவை என்றே தமிழ் மக்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அது பற்றி செயலணியின் அறிக்கை துளியளவும் இல்லை. போரில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைப் போல அந்த விடயங்களும் காணாமல் போயுள்ளமைதான் வேடிக்கை.
மற்றுமொரு முக்கியமான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளையும் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தையும் ஒரே தராசில் வைக்கிறது அறிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். மக்களின் கனவுக்காக போராடிய உன்னதமானவர்கள். ஸ்ரீலங்காப் படைகள் காலம் காலமாக தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறவர்கள். இவர்களை எப்படி செயலணி ஒரே தராசில் வைக்கிறது?
செயலணியின் அமர்வுகளின்போது விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயங்கள் குறித்தும், அவர்களை நினைவுகூரும் தாகம் குறித்தும் மக்கள் வழங்கிய வாக்குமூலங்கள் எங்கு போனது? ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்ற பெயரில் வழங்கப்பட்ட வாதைகளை செயலணி பாராட்டுகிறதா?
விச ஊசி ஏற்றப்பட்டது என்ற சந்தேகம் முதல் தமக்கு வதைமுகாமில் நடந்த அநீதிகளை குறித்தெல்லாம் எத்தனை முன்னாள் போராளிகள் செயலணியின் முன்னால் வாக்குமூலம் வழங்கினர்? அந்த வாக்குமூலங்கள் அதனையும் அந்த வலிகள் எதனையும் நல்லிணக்கச் செயலணி ஏன் புரிந்துகொள்ளவில்லை? இன்றைக்கும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இந்த செயலணியால் எந்த தீர்வையும் தர இயலாது தானே?
காணிகளை மக்களிடம் வழங்குதல், இராணுவத்தை கிராமங்களிலிருந்து வெளியேற்றுதல், வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி முதலிய விடயங்களை செயலணி பரிந்துரைத்துள்ளது. இதெல்லாம் மைத்திரிபாலவுக்கும் ரணிலுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தெரியாத விடயமா? சிங்கள மக்களுக்குத் தெரியாத விடயமா? சரி. இனியாவது இவைகள் நடைமுறைப்படுத்தப்படுமா?
எத்தனையோ அறிக்கைகளை, எத்தனையோ ஒப்பந்தங்களை, எத்தனையோ பேச்சுவார்த்தைகளை, எத்தனையோ வாக்குறுதிகளை தமிழீழம் கண்டுவிட்டது. இம்முறை எங்கள் தலைவர்கள் வாய் மூடி இருக்க, தமிழ் இனப்படுகொலை குற்றத்தை மூடி மறைக்கும் – நல்லிணக்கமாக வெள்ளையடிக்கும் செயற்பாடு இனிதே நிறைவேற்றப்படுகிறது என்ற கவலைதான் ஈழச் சனங்களுக்கு.
ஆசிரியர்,
செண்பகம்.
11.01.2017