Designed by Iniyas LTD
இனவாதக்கட்சி ஞானசார தேரருக்கு பிணை மறுப்பு!
கைதுசெய்யப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப் பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை தொடர்ந்தும் இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இவ்வாறு அறிவித்தார்.
2015ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் நான் ஆழமாக ஆராய்ந்து விட்டேன். அது சந்தேகநபர் தரப்புக்கே பிரச்சினையாக உள்ளது. அவர்களின் வாதங்கள் இன்னும் மன்றுக்கு முன்வைக்கப்படாத நிலையில் அவர்கள் கால அவகாசம் கோருகின்றனர். அதன்படி இந்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதுடன் அதுவரை சந்தேக நபரான ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறும் கட்டளையிடுகிறேன் என ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க இதன்போது அறிவித்தார்.
வழமைபோன்று இதுகுறித்த வழக்கு விசாரணைகள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறைச்சாலையின் சிறப்பு பஸ்வண்டி மூலம் ஞானசார தேரர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இதன்போது மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தை சுற்றி மூன்று அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் கலகத்தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய விசாரணையின் போது முறைப்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொடவின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான உபுல் குமாரப் பெரும, ஜனக பண்டார ஆகியோர் ஆஜராகினர். சந்தேகநபரான ஞானசார தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டிறந்த வரலியத்தவின் ஆலோசனையின் பிரகாரம் சிரேஷ்ட்ட சட்டத்தரணி கௌசல்யா லக்மாலி மன்றில் பிரசன்னமாகியிருந்தார். விசாரணையாளர்கள் தரப்பில் ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லியனகே மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகள் ஆரம்பமான போது ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கௌசல்யா தேரருக்கு பிணை கோரினார். எனினும் அவர் மன்றில் வாதங்களை முன்வைக்காத நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி டிறந்த வரலியத்த சுகயீனம் காரணமாக மன்றில் ஆஜராகவில்லை எனவும் வாதங்களை முன்வைக்க குறுகிய கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறும் கோரினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி ஜனக பண்டாரவும், உபுல் குமாரபெருமவும் 2015ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை என வாதிட்டனர்.
அத்துடன் பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்ட அவர்கள், சந்தேக நபரான ஞானசார தேரர் தரப்பில் 2015ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் கடந்த வழக்குத் தவணையின் போது உருவாக்கிய சவால்களையும், வாதங்களையும் நிராகரித்து கருத்துரைத்தனர்.
இதன்போது மன்றில் வாதத்தை முன்வைத்த சட்டத்தரணி ஜனகபண்டார ”9725/16 என்ற இந்த வழக்கு சந்தியா எக்னெலிகொட என்ற சாட்சியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாட்டுக்கு அமையத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஹோமாக பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரியின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த தவணையின்போது மன்றில் எழுப்பப்பட்ட சில சட்டம் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துரைகளை முன்வைக்கும் இச்சந்தர்ப்பத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒன்று, சாட்சியாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்பதையும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அது சாத்தியமானவை என்பதையும் தெளிவுபடுத்துவதுடன் அதன் கீழ் தொடரப்படும் வழக்கு விசாரணைகளில் சந்தேகநபருக்கு நீதிவான் நீதிமன்றில் பிணை வழங்க முடியுமா என்பதனையுமே நான் தெளிவுபடுத்தவுள்ளேன்.
2015 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சட்டமானது குற்றம் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இதில் 1, 2, 3, 4, 9 ஆகிய பிரிவுகள் 2015 ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி முதலாவது பிரிவில் 2 (அ) அத்தியாயத்தில் சாட்சிப் பாதுகாப்பு குறித்த வியாக்கியானம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் (ஆ), (ஈ) ஆகிய பிரிவுகளில் குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனை தொடர்பான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
4 ஆவது, 5 ஆவது அத்தியாயங்களில் சாட்சியாளர்களின் உரிமை உள்ளிட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் சந்தியா எக்னெலிகொட என்பவர் ஒரு சாட்சியாளர் என்பதை நான் முதலில் மன்றுக்கு தெளிவுபடுத்துகின்றேன்.
2010.01.204 அன்று பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பிலான முதலாவது முறைப்பாட்டினை அளித்தவர் இவரே. 7414/14 இலக்கத்தின் கீழ் இதுதொடர்பிலான வழக்கு இதேமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவில் 46 ஆவது அத்தியாயத்தில் சாட்சியாளர் என்பவர் யார் என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி சாட்சியாளர் என்பவர் முதலாவது முறைப்பாட்டினை அளிப்பவர், குற்றம் தொடர்பிலான தகவல் வழங்குபவர் என பல வரைவிலக்கணங்கள் உள்ளன. அதன்பிரகாரம் சந்தியா சாட்சியாளர் என்ற வட்டத்துக்குள் வருகிறார்.
இந்நிலையில் அந்த சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பொழுது அவர் யாரிடம் முறையிடுவது என்ற கேள்வி எழுகிறது. சந்தேகநபர் சட்டத்தரணிகள் கூறுவதைப் போன்று அதிகார சபை ஒன்று ஊடாக விசாரணை மேற்கொள்வது அவர்களிடமே முறைப்பாடு செய்து போன்ற விடயங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வளக்கத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அப்படியிருக்கும் நிலையில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் வழக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரிவுகளை அமுல்செய்யும் போது சாட்சிகள் தமக்கான அச்சுறுத்தல் குறித்து யாரிடம் முறையிடுவது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு சிங்கள சட்டத்தில் 3 (2) உ பிரிவும், ஆங்கில சட்டத்தில் 3 ஜி பிரிவும் விளக்கம் தருகின்றன. அந்தச் சட்டப்பிரிவுகளின் பிரகாரம் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரிடமும் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவோ முறைப்பாடு அளிக்க முடியும்.
சிங்கள சட்டத்தின் 3 (1) ஈ, 2, 3, 4 ஆகிய அத்தியாயங்களின் கீழ் ஆங்கில சட்டத்தில் 3 (எவ்) 2, 3 (எவ்) 3, 3 (எவ்) 4 ஆகிய அத்தியாயங்களின் கீழும் சாதாரண பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளது. ஆகவே சந்தியாவின் முறைப்பாட்டை ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்வதற்கு எவ்விதமான தடையும் இல்லை என தெரிவித்தார்.
இதன்போது குறிக்கிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க ”உண்மையில் இந்தச் சட்டத்தில் யார் விசாரணை செய்வது, யார் வழக்குத் தாக்கல் செய்வது போன்ற விடயங்கள் எங்குமே குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கும்போது பொலிஸார் இதனை விசாரணை செய்வதே தவறாக கொள்ளமுடியாது” என்றார். இதனையடுத்து தொடர்ந்தும் கருத்துரைத்த சட்டத்தரணி ஜனக பண்டார ”நீதிபதி அவர்களே உண்மையில் நீங்கள் கூறியதையே நானும் கூறுகிறேன். ஆகவே சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகளின் வாதம் அடிப்படையற்றது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சந்தியாவின் முறைப்பாட்டை விசாரணை செய்யும் அதிகாரம், வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உள்ளது.
அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து நான் புதிதாக கூறுவதற்கு இல்லை. எனினும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் 8 (1) அ அத்தியாயத்தின் பிரகாரம் அச்சுறுத்தல் என்பதற்கான வியாக்கியானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாட்சியாளர் ஒருவரை உடர்ரீதியாக அல்லது அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அல்லது அவரது சொத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடும் அச்சுறுத்தலாகவே கொள்ளப்படுகிறது. அதன்படி அந்தக் குற்றத்தின் ஈடுபடுவோருக்கு குற்றம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டனையாக விதிக்கப்பட முடியும். இதற்கான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்கவும் 10 (2) ஆம் அத்தியாயம் பரிந்துரைக்கிறது. 10 (3) ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் வேறு வழக்குகளில் பிணையில் இருந்தால் அவரது பிணையை இரத்துச் செய்யுமாறு குறிப்பிடுகிறது.
அத்துடன் இந்தச் சட்டத்தில் 10 (1) அ அத்தியாயத்தின் பிரகாரம் இத்தகைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் உங்கள் நீதிமன்றுக்கு (நீதிவான் நீதிமன்றம்) இல்லை. பிணை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளது. அதுவும் விதிவிலக்கான காரணங்களை மையப்படுத்தியே பிணை வழங்க முடியும். ஆகவே சந்தேகநபரின் பிணை கோரிக்கைக்கு நாம் எதிர்ப்பு வெளியிடுகின்றோம் என்றார்.
இதனையடுத்து சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பான பாராளுமன்றின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் முகமாக ஹன்சாட் பிரதியொன்றினையும் மன்றிடம் கையளித்தார்.
இதனையடுத்து சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணி கௌசல்யா இதுகுறித்து தமது வாதங்களை முன்வைக்க இரு நாட்கள் கால அவகாசம் கோரினார். இதன்போது நீதிவான் ரங்க திஸாநாயக்க அதனை எதிர்த்தார். இந்த மன்றுக்கு பல வழக்குகள் விசாரணை செய்யும் வேலை உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஒரே வழக்கில் காலத்தை செலவிட முடியாது. நான் மட்டுமன்றி இங்கு ஊடகவியலாளர்களும் ஒவ்வொரு நாளும் இந்த வழக்கிலேயே காலத்தை கடத்துகின்றனர். இந்தச் சட்டம் தொடர்பில் நான் ஆழமாக ஆராய்ந்து விட்டேன். அது சந்தேகநபர் தரப்புக்கே பிரச்சினையாக ாக உள்ளது. அப்படியிருக்கையில் அவர்கள் இச்சட்டம் குறித்து ஆராய நான் கால அவகாசம் எடுத்துக்கொள்வதாக ஊடகங்களிடம் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் இந்த சட்டப்பிரச்சினையை மன்றுக்கு கொண்டு வந்தவர்களே சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணிகளே. அவர்களின் வாதங்கள் இன்னும் மன்றுக்கு முன்வைக்கப்படாத நிலையில் அவர்கள் கால அவகாசம் கோருகின்றனர். அதன்படி இந்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதுடன் அதுவரை சந்தேக நபரான ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறும் கட்டளையிடுகிறேன் என்றார்.
இதனைடையே ஞானசார தேரருக்கு ஆதரவாக ஹோமாக நீதிமன்றில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்து குழப்பம் விளைவித்த 6 பிக்குகள், ஒரு பெண் உள்ளிட்ட 11 பேர் தொடர்பிலான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணை சட்டத்தின் 14ஆம் அத்தியாயத்துக்கு அமைவாகவும் பொலிஸாரின் விசாரணை அறிக்கை, சட்டத்தரணிகளின் வாதங்களுக்கு அமைவாகவும் அனைத்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.