Designed by Iniyas LTD
ஐந்து மாணவர்கள் கடத்தல் விவகாரம்! கடற்படை முகாம் சோதனை
வெலிசறை கடற்படை வைத்திய சாலையுடன் கூடிய கடற்படை முகாமை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொண்ட விசேட அனுமதியொன்றுக்கு அமைவாகவே, புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடற்படையினரால் கடத்தப்பட்ட 5 மாணவர்களும் இறுதியாக பயணித்த கார், அந்த கடற்படை முகாமில் உள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களுக்கு அமைவாகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வத்தளையில் வைத்து கடத்தப்பட்ட ஜோன்ரீட் என்பவரின் வேன் திருமலை முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் செஸி, எஞ்சின்கள் வேறுவேறாக இருந்த நிலையிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே அதனுடன் தொடர்புபட்ட தேவைக்காக வெலிசறை கடற்படை முகாமும் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய கூட்டுக்கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையிலான பொலிஸ் குழு இந்த சோதனைகளை நடத்தியது.
முன்னதாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதிப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹமட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட தலைநகரின் பல்வேறு பிரதேசங்களில் வைத்தும் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய விசாரணைகளுக்கு அமைய 11 ஆகும்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிலாகே ஜோன்ரீட் அரிப்பு, கிழக்கு அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் ஆகியோரே கடத்தப்பட்டுள்ள ஏனையவர்களாவர்.