Designed by Iniyas LTD
இயக்கச்சி பகுதியிலும் தமிழ்மக்களின் காணியை விழுங்குகிறது சிங்களஅரசு.

தமிழர் தாயகம் பளை இயக்கச்சியில் தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகளை சிறீலங்கா படைகள் கையகப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இயக்கச்சிப் பகுதியில் பொதுமக்களின் 36 ஏக்கர் காணியினை சிறீலங்காவின் 552 ஆவது படைப்பிரிவு க்காக படையினரால் சுவீகரிக்கப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணி உரிமையாளாகளுக்கு இந்த காணி சுவீகரிப்புத் தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
ஏ 9 வீதிக்கு அருகாமையில் இயக்கச்சி ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பொது மக்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி சிறீலங்காவின் 552 ஆவது படைப்பிரிவு க்கான தலைமையகம் அமைப்பதற்கு சுவீகரிக்கவுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஊடாக காணிச்சொந்தக்காரர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காணியில் நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளோம். கடந்த கால போர் சூழல் காரணமாக நாம் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மாத்தளன், பொக்கனை வரை சென்று 2009 ஆம் ஆண்டு படை கட்டுப்பாட்டிற்குள் சென்று மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தோம்.
அதன் பின்னர் 2009.9.14 அன்று எமது சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது எமது காணிகளில் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது எமக்கு தெரியவந்தது எனவும் அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனினும் எமது காணிகளை விடுவித்து தருமாறு பல தடவை பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் கவனத்திற்கும் பிரதேச செயலகத்தில் மாதம்தோறும் இடம்பெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தரும் படை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம் ஆனாலும் எமக்கு எந்தவித பதிலும் ,பலனும் கிடைக்கவில்லை.
தற்போது எமது காணிகளை படைகள் கையகப்படுத்தவுள்ளது.
எனினும் எமக்கு இதற்கு பதிலாக மாற்று காணிகளோ நட்டஈடுகளோ தேவையில்லை. எமது சொந்த காணியை விடுவித்து தரவேண்டும் நாம் அதில் தான் குடியிருக்கவேண்டும் என அவர்கள் வவுனியா மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளார்கள்..