Designed by Iniyas LTD
இரட்டைப் படுகொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!
நுகேகொடை, கங்கொடவில பிரதேசத்தில் காணித்தகறாறு ஒன்றின் போது இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகளுடன் தொடர்புடைய மூவரைக் குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்தில், பிரியந்த குமாரடி சில்வா, சமந்த குமார டி சில்வா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், மஹிந்த குமார டி சில்வா சிறுகாயங்களுக்கு இலக்காகியிருந்தார். குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட, சிறிசேன பெரேரா, ஜகத் சில்வா, சீலாவதி பெர்ணான்டோ (வயது 79)ஆகிய மூவருக்கே மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது.
சமந்த குமார டி சில்வாவின் படுகொலையுடன் மூவருக்கும் தொடர்பில்லை என அறிவித்த நீதிபதி விக்கும் களுஆராச்சி, அது, வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் உயிரிழந்த ஜகத் சில்வாவால் செய்யப்பட்டமை ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரியந்த குமாரடி சில்வாவை தாமே கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதுடன், மஹிந்த குமார டி சில்வாவையும் தாமே தாக்கியதாக ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, மனிதப் படுகொலை செய்த குற்றத்துக்காக முவருக்கும் மரணதண்டனைத் தீர்ப்பளித்த நீதிபதி, சிறிசேன பெரேரா, ஜகத் சில்வா ஆகியோருக்கு இரண்டுவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், சீலாவதி பெர்ணான்டோவின் வயதைக் கருத்திற்கொண்டு இரண்டுவருட சாதாரண சிறைத்தண்டனை விதித்தார்.
இந்தப் படுகொலைகள் தொடர்பில் 13 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அதில் 3 பேர் வழக்கு இடம்பெற்ற காலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.