தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த போது மிருகத்தை விட கேவலமாக நடத்தினர்

போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் இருந்து வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களை மிருகத்தை விட கேவலமாக நடத்தினர் என இரண்டு பிள்ளைகளை இழந்த தாயொருவர் ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் 3ஆவது நாளாக இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் 7 மற்றும் 2 வயதுடைய பிள்ளைகள் இருவரை காணாமல் தவிக்கும் தாய் ஒருவரே மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.

அதேவேளை, வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் போன எனது மகனை வவுனியா இராமநாதன் முகாமில் இராணுவத்தினர் கொண்டு போய் விட்டனர். அங்கிருந்த இளம் பிள்ளைகளை சீ.ஐ.டி பிடித்து சென்றபோது எனது மகனையும் பிடித்துச் சென்றதில் இருந்து எனது மகனைக் காணவில்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் மகன் தான் வேணும் என ஆணைக்குழு முன்னால் மற்றொரு தாயார் சாட்சியமளித்தார்.batti-commission

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், எனது மகன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்துவிட்டு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து வவுனியா இராமநாதபுரம் முகாமில் கொண்டுபோய் விட்டனர். நாங்கள் மன்னாரில் தான் இருந்தோம். அங்கு இருக்கும் போது உறவினர்கள் கண்டதாக தெரிவித்தனர். அத்துடன் முகாமில் இருக்கும் விடயத்தையும் எங்களுக்கு மகன் தெரியப்படுத்தி இருந்தார். அதன்படி நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். ஆனால் கிட்டப்போய் பேச இராணுவம் விடவில்லை அதனால் திரும்பி வந்துவிட்டோம். பின்னர் அவரை சீ.ஐ.டி முகாமில் வைத்து பிடித்துக் கொண்டு சென்றதாக அறிந்தோம்.

அவருடன் வேறு பலரையும் கொண்டு சென்றிருந்தது. அதற்குப்பிறகு ஓமந்தை முகாமில் வைத்திருந்ததாக அவருடன் நின்ற ஒருவர் தெரிவித்தார். அதற்குப்பிறகு எங்களிடமே உங்கள் பிள்ளை இருக்கிறார் என்றும் ஒரு மாதத்திற்குள் முடிவு கூறுவதாகவும் சீ.ஐ.டியினர் வீட்டிற்கு வந்து விசாரித்து விட்டு எங்களிடம் கூறிச் சென்றனர் . ஆனால் இதுவரை எந்த தகவலும் தெரியாது. இராமநாதன் முகாம் மற்றும் ஓமந்தையில் இருக்கும் போது பெயர் பதிவுகளை பின்னர் சென்று பார்க்கும் போது காணவில்லை. எனினும் காணாமல் போனவர்கள் எல்லாருடைய பெயர்களையும் திட்டமிட்டு அரசாங்கம் எடுத்து விட்டது. இதற்கு அரசாங்கம் தான் பதில் கூறவேண்டும் என அவர் மேலும் சாட்சியமளித்தார்.

Comments
Loading...