தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு சென்னையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை சிங்கள அரசு போரைக் காரணம் காட்டி இலங்கையின் முப்படைகளாலும் 20000 அதிகமான தமிழர்கள் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இறுதிப்போரில் சர்வதேச போர்விதிமுறைக்கு உட்பட்டு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்களும் இதில் அடங்குவார்கள். இறுதிப்போர் முடிந்து பத்தாண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது.

இலங்கை அரசால் வலிந்து திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், மகனை இழந்த தாய் போன்று பாதிக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாகத் தாய் நிலத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் அமைதிப்பேரணியாகச் சென்று தங்கள் வேதனைகளை உணர்வுகளைப் பதிவு செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டறிந்து தாருங்கள் என அறவழியில் போராடி வருகின்றனர்.

இந்த ஆண்டும், சர்வதேச காணாமல் போனார் நாளான ஈழத் தாயகத்தில் நடைபெறவிருக்கும் எமது உறவுகளின் பேரணியை வெற்றி பெறவைக்கும் வாய்ப்பாகத் தாயகத் தமிழகத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆதரவளித்து எங்கள் கோரிக்கைகளை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எடுத்து வைக்கிறோம்.

2009 மே மாதத்தில் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு காணாமலாக்கபட்டோர்களின் தாய்மார்கள், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, அடுத்து நடக்கவிருக்கும் பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் ஆணையிடுவதாக அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியுள்ளார். என சீமான் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Loading...