தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய பெண் விவகாரம்-ஐரோப்பிய நீதிமன்றத்திடம் ஆலோசனை

இலங்கைக்கு சுற்றுலாப்பயணியாக வந்திருந்தவேளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண் குறித்த வழக்கு நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனின் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய பெண்மணி இலங்கைக்கு தான் சுற்றுலாப்பயணியாக செல்வதற்கான பதிவுகளை மேற்கொண்ட சுற்றுலாப்பயண நிறுவனம் 29,000 பவுண்ட்கள் நஸ்டஈடு வழங்கவேண்டுமென கோரியுள்ளார்.

பென்தோட்டையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை அந்த ஹோட்டலில் பணிபுரிந்த நபர் ஒருவரால் தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக அந்த பெண்மணி குற்றம்சாட்டியுள்ளார். தனது அறைக்கு செல்வதற்கான மாற்றுவழியை காண்பிப்பதாக தெரிவித்த அந்த நபர் பொறியல் தேவைகளிற்காக பயன்படுத்தப்படும் அறைக்குள் தன்னை சிக்கவைத்து பாலியல் வன்முறைக்குஉட்படுத்தினார் என பாதிக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண்மணி குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் தான் கர்ப்பமாகயிருப்பது தெரியவந்ததாகவும் இதனை தொடர்ந்து தனது குழந்தைக்கு தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவபரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் வன்முறை காரணமாக இலங்கை ஹோட்டலில் தன்னை பதிவு செய்த சுற்றுலாப்பயண நிறுவனம் தனது ஓப்பந்தத்தை மீறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் ஊழியரின் நடத்தைக்கு சுற்றுலாப்பயண நிறுவனமே பொறுப்புகூற வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். முதலில் நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை நிராகரித்திருந்த போதிலும் தற்போது உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட சுற்றுலாப்பயண நிறுவனம் பதிலளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டனின் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பில் ஐரோப்பாவின் நீதிக்கான நீதிமன்றத்திடம் சில விளக்கங்களை கோரவுள்ளது.


Comments
Loading...