Designed by Iniyas LTD
இலங்கை சட்டத்தின் கீழ் போர்க்குற்ற விசாரணை நடக்கும் : அதிபர் சிறிசேன
இலங்கை அதிபர் சிறிசேன, இறுதிக்கட்ட போரின்போது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து உளநாட்டு குழுவின் விசாரணை அடுத்த மாதம் துவங்கும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச விசாரணை கிடையாது என தெரியவருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் இறுதிகட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குவந்தது. இந்த இறுதிக்கட்ட போரின்போது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியாயினர். பலர் காணாமல் போயினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் முடிவுற்ற நிலையில் இதுகுறித்து உள்நாட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் பெருமளவு மனிதஉரிமை மீறல்கள் நடந்தது குறித்து சர்வதேச அளவில் போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பல முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்திலும் போர்குற்ற விசாரணைக் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு அப்போதைய அதிபர் ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்தார். உள்நாட்டு விசாரணையே போதும், சர்வதேச விசாரணை தேவையில்லை என்றார். எனினும் ஐ.நா. மனித உரிமை அமைப்பு ,போர்குற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசுக்கு கெடு விதித்திருந்தது.
இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்போற்றுள்ளார். எனவே போர்க்குற்ற விசாரணை தீவிரப்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதிபர் சிறிசேன கூறியதாவது,
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் குறித்து உள்நாட்டு குழு போர் குற்றவிசாரணையை அடுத்த மாதம் துவக்கும். இலங்கை அரசின் உள்நாட்டு சட்டதிட்டங்களின் படி இந்த விசாரணை துவங்கும். சுதந்திரமான தேசிய நீதி விசாரணைக்குழு விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டும். மேலும் இதில் சர்வதேச விசாரணை தேவையில்லை. இந்த விசாரணைக்கு ஐ.நா.மனித உரிமை அமைப்பின் வழிகாட்டுதல்களை இலங்கை அரசு வரவேற்கிறது என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிசேனவின் நிலைப்பாடு ராஜபக்சே ஆட்சியின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது என்பது ஈழத்தமிழர்களிடமும் தமிழகத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பேர் சமூகத்திடமும் பெரும் வருதத்தை ஏற்படுத்தியுள்ளது.