தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை: வெங்கய்ய நாயுடு

VENKAIAH NAIDUஇலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நமது நாடு இதுவரையிலும் குறிப்பிட்ட மாதிரியை (கொள்கையை) பின்பற்றியது. அதாவது, சோவியத் யூனியனின் சோஷலிச மாதிரியைப் பின்பற்றியது. எனினும், அதனால் இந்தியாவுக்கு எந்த பயனுமில்லை என்பது நிரூபணமாகி விட்டது.

ஆகையால், நமது நாட்டின் அணுகுமுறையை மாற்றி வருகிறோம். இலவச மின்சாரம் போன்றவற்றை அளித்து மக்களை ஈர்த்து வருகிறோம். இதுபோன்ற இலவசங்களால், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தகமும், தொழில் துறையும் மிகவும் முக்கியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. அதேபோல், நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிமையாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக தொழில் துறையில் நிலவும் முட்டுக்கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் தனியாரின் பங்களிப்பையும் அரசு ஊக்குவிக்கும்.

ஏர் இந்தியா நிறுவனமும், அரசால் நடத்தப்பட்டு வரும் ஹோட்டல்களாலும் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டு மக்களும் மறைமுகமாக பாதிக்கப்படுவர். நாட்டில் தலித்துகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. சட்டம்-ஒழுங்கு விவகாரம் என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதாகும். அதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்புமில்லை என்றார் வெங்கய்ய நாயுடு.

Comments
Loading...