தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இ.மி.ச. ஊழியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி, பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

இலங்கை மின்சார சபையின் சகல ஊழியர்களுடன் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும், பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கூட்டு ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.00 மணிக்குள் மின்சார சபை ஊழியர்கள் சேவைக்கு வருகை தராது போனால், அவர்கள் தனது சேவையிலிருந்து சுயமாக நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் சகல ஊழியர்களினதும் விடுமுறையை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் செல்லுபடியற்றதாக மாற்றுவதற்கு சபையின் நிருவாகம் தீர்மானித்திருந்தது.

இதற்கு சபையின் ஊழியர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவையை ஒழுங்காக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இ.மி.ச. நிருவாகம் அறிவித்திருந்தது. அவசியப்படும் ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரியின் அனுமதியின் பேரில் விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் நண்பகல் முதல் இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம் எடுத்திருந்தது. இக்காலப் பகுதிக்குள் தீர்வை வழங்க அமைச்சு முன்வராவிடின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...