தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழஇன அழிப்பில் பிரிட்டன் 30 ஆண்டுகால துரோக வரலாறு

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், காலத்தின் தேவைகருதியதும், கட்டாயமானதும், சிறப்புமிக்கதும், தமிழின அழிப்பின் உண்மைத் தன்மைகளையும், அதற்குத் துணைநின்ற அரசுகளையும் ஆதாரத்தோடு வெளிக்கொணரக் கூடியதுமான ஈழஇன அழிப்பில் பிரிட்டன் 30 ஆண்டுகால துரோக வரலாறு எனும் நூலும், நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் எனும் நூலுமாக இரண்டு நூல்கள் 07.03.2015 சனிக்கிழமை எசன் மாநகரத்திலே Hindenburgstr-57ல் அமைந்துள்ள மண்டபத்திலே, சிறப்பாக வெளியீடு செய்து வைக்கப்பட்டன.

நாதஸ்வர வித்துவான் நாதஸ்வர மதுரகானமணி திரு. என்.கே. பாலமுரளி அவர்களும், நாதஸ்வர இசைச்செல்வன் கஜேந்திரன் பாலமுரளி அவர்களும், தவில் வித்துவான் தவில் லயஞான லலிதமணி திரு. எஸ். எஸ். சுகுமார் அவர்களும், தவில் வித்துவான் தவில்லயமணி திரு. திரு. கே.பி. கேசவன் ஆகியோரது மங்கலவாத்திய இசை முழக்கத்தோடு வழாவுக்கு வருகை தந்தோர் அனைவரும் இருமருங்கும் எழுந்து நிற்க, விழாவின் முதன்மை விருந்தினர்கள் மண்டப வாயிலில் இருந்து மேடைவரை அழைத்துவரப்பட்டார்கள். இவ்வேளை வெளியீடு செய்து வைக்கப்பட்ட இரண்டு நூல்களும் மேடைக்கு எடுத்து வரப்பட்டன.

முதன்மை விருந்தினர்களில் ஒருவரும், ஈழ இனஅழிப்பில் பிரிட்டன் 30 ஆண்டுகால துரோக வரலாறு எனும் நூலின் ஆசிரியரும், உலகில் நடைபெறுகின்ற அரச அடக்குமுறைகளையும், அநீதிகளையும், உலகுக்கு ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லக்கூடியவரும், லண்டன் மாநகரத்திலிருந்து வருகை தந்தவருமான, திரு. பில் மில்லர் அவர்களுக்கு, மண்டப வாயிலில் வைத்து அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றுக் கொண்டார்கள்.

சிறப்பான வரவேற்பை அடுத்து, விழாவின் முதன்மை விருந்தினர்களான, திரு. பில் மில்லர் திரு. நிக்கோலாய் யுங்இ திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி வைத்தார்கள். தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிறீலங்கா இந்தியப் படைகளாலும், இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களுக்கும் நாட்டுப் பற்றாளர்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து திரு. வலன்ரையின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

லண்டன் மாநகரத்திலிருந்து வருகை தந்தவரும், லண்டன் காப்பரேட் வார்ட்சின் ஆய்வாளரும், 1971ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி இன் எழுச்சியை நசுக்கியதிலும், 1984ம் ஆண்டு, இந்தியாவில் பஞ்சாப்பில் நடைபெற்ற பொற்கோயில் தாக்குதல் சம்பவத்திலும், 1980களில் உகண்டாவில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய கூலிப்படைகளைப் பாதுகாத்தமையிலும், பிரித்தானிய அரசின் தலையீடு இருந்ததையும், பிரித்தானிய அரசின் கறைபடிந்து பக்கங்களையும், ஆதாரத்தோடு வெளிக் கொணர்ந்தவரும், ஈழ இனஅழிப்பில் பிரித்தானிய அரசின் 30 ஆண்டுகால துரோக வரலாறு எனும் நூலின் ஆசிரியரும், ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளரும், மக்கள் தீரப்பாயத்துக்குப் பல ஆதாரங்களை வழங்கியவருமான, திரு. பில் மில்லர்  அவர்கள் அரங்கம் நிறைந்த கரகோசத்தோடு மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். ஆங்கிய மொழியில் அமைந்த இவரது உரை இறுதியில் தமிழ் மொழியில் எடுத்துரைக்கப்பட்டது. ஆதாரங்கள் அனைத்தும் திரையில் இவரால் காண்பிக்கப்பட்டு, வரிசைப்படி விளக்கமும் அளிக்கப்பட்டது.

அடுத்து திரு. ஜெயச்சந்திரன் அவர்களும், அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் அதிதீவிர செயற்பாட்டாளரும், நிரந்தர மக்கள் தீரப்பாயத்தின் செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக இருந்து உழைத்தவரும், சுயாதீன ஊடகவியலாளருமான, திரு. நிக்கோலாய் யுங் அவர்களது உரையும் இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் சார்பில், உங்களுடைய விடுதலைப் பயணத்துக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் நீங்கள் செல்லும் பாரதயில் நாங்களும் சேர்ந்தே பயணிப்போம் தங்களுடைய சொந்தப் பலத்தின் அடிப்படையில் சுதந்திரம் அடைவதற்கு எங்களால் முடிந்தவரை ஆதரவு நல்குவோம் என்று திரு. நிக்கோலாய் யுங்   அவர்கள் தனது உரையின் இறுதியில் உறுதி வழங்கினார்கள். திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான மதிப்புக்குரிய பழ நெடுமாறன் ஐயா அவர்களும் பிரத்தியேகமாக நூல்வெளியீட்டுக்கு வழங்கிய Skype மூலமான உரையும் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

திரு. பில் மில்லர் அவர்கள்  ஈழ இன அழிப்பில் பிரித்தானிய அரசின் 30 ஆண்டுகால துரோக வரலாறு எனும் நூலை வெளியிட்டு வைக்க, தமிழின உணர்வாளரும் உலகத்தமிழர் பேரவையின் தலைவருமான பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் முதலாவது பிரதியைப் பெற்றுக் கொண்டதோடு, அவசியமான விடயங்களையும், காலத்தின் தேவையுணர்ந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் தனது உரையில் எடுத்துக் கூறினார்கள்.

அடுத்ததாக சிறீலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் என்ற நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இரண்டினதும் உரித்தான நூல் இதுவாகும். சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் யேர்மனி பிறேமன் நகரில், 2013 டிசம்பர் 07ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் ஆதாரத்தோடு ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். சர்வதேச மனித உரிமைகள் சங்கம், சிறிலங்காவிலான அமைதிக்கான அயர்லாந்து மன்றம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டது. 13 மொழிகளில் இந்நூல் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தகுதி, சிறிலங்கா தொடர்பான 1வது அமர்வின் தீர்ப்பு டப்ளின் ஜனவரி 2010, முறைப்பாடுகள், எதிர்தரப்பு வாதம், தீர்ப்புகள், பரிந்துரைகள், முடிவுறுத்தும் குறிப்புகள், இணைப்பு 1 முறைப்பாடு தரப்பின் தொகுப்புரையின் சில பகுதிகள், இணைப்பு 2 புகைப்படம், மற்றும் எழுத்து மூலமானவை என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் விரிந்து செல்கின்றது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது ஒரு சர்வதேவச கருத்துக்கூறல் தீர்ப்;பாயமாகும். அது எந்த அரசு அதிகார பீடத்துக்கும் உட்படாமல், சுயாதீனமாக, செயற்படுகின்ற ஓர் அமைப்பாகும்.

மக்களினுடைய விடுதலை மற்றும் உரிமைகளுக்கான லெலியோ பாஸ்ஸோ சர்வதேச நாடுகளால் ஆதரவளிக்கப்படும், பி.பி.ரி ஆனது, 1979ம் ஆண்டு யூன் முதல் 31 நாடுகளைச் சேர்ந்த பரந்த வீச்சில் அடங்கிய சட்டத்துறை வல்லுனர்கள், எழுத்தாளர்கள், மற்றும் ஏனைய கலாச்சாரம் மற்றும் சமூக தலைவர்களால் இத்தாலியின் பொலொக்னோ நகரில் உருவாக்கப்பட்டது.

சிறீலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் என்ற நூலை, இதற்காகத் தன்னைப் பவழிகளில் அர்ப்பணித்து உழைத்த, சர்வதேச மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளர் திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் வெளியிட்டு வைக்க, அருட்பணியாளர் Albert Kohlen, அவர்கள் முதலாவது பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

சர்வதேச மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளர் திரு. விராஜ் மென்டிஸ் அவர்களது நன்றியுரையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. உரைகளின் நடுவே நடனமணிகளின் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. இருநூறுக்கும் அதிகமான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். கலந்துகொண்ட மக்கள் அனைவரும் மேடைவரை சென்று வெளியிடப்பட்ட இரண்டு நூல்களையும் பெற்றுக் கொண்டனர். நூல் வெளியீட்டு நிகழ்வை திரு. லோ. வலன்ரையின் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

book1 book2 book3 book4

Comments
Loading...