Designed by Iniyas LTD
ரணிலின் உறுதி மொழிகள் உரிய காலத்தில் விரைவாக செயல் வடிவம் பெறவேண்டும் – சுரேஷ்பிறேமச்சந்திரன்
வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யுத்தத்தின் பின்னர் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அதனைக் கவனத்தில் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
அவையனைத்தும் விரைவில் செயல் வடிவம் பெறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் அபிவிருத்தி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிட்டம் மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்டம் ஒன்றாகும். இங்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. மீள்குடியேற்றம் தற்போது வரையில் பூரணத்துவம் பெறவில்லை.
இராணுவத்தினர் மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று வரையில் தமது சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அதேநேரம் அசாதாரண நிலைமைகளால் பெண்களே குடும்பங்களில் தலைமைகளை தாங்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களின் குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்.
யுத்தத்தால் நேரடியாகப் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாக காணப்படுவோரின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்வுக்கான உதவிகளும் உரிய முறையில் வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இம்மாவட்டத்தில் மக்கள் சொந்தக்காணிகளைக் கொண்டிருக்கின்ற போதும் அவற்றுக்குரிய உறுதிப்பத்திரங்களை தொலைத்தவர்களாக காணப்படுகின்றார்கள்.
அதனால் தமது இருப்பிடத்தையும் விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்தவர்களின் வாழ்வாதாரத்துக்குரிய கடன் வசதிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அதேநேரம் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைக்கப்பட்டபோதும் அவர்கள் சாதாரண மக்களுடன் இணைந்து சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.
தற்போது கூட தங்கள் முன்னிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தமது நெருக்கடிகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆகவே அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இம்மாவட்டதில் பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கிராம வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் அத்துடன் விவசாய, கடற்றொழில், நீர்பாசன, வடிகால் அமைப்பு தொடர்பான மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
அதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களை மையமாக கொண்ட தேசிய அலுவலகம் ஒன்றின் தலைமை அலுவலகமொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், உளவளத்தை மேம்படுத்துவதற்கு நிலையமொன்றை அமைக்கவுள்ளதாகவும், மக்கள் பிரச்சினைகள் வடக்கில் நிறுவப்படும் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் காணிகள் விடுவிப்பு தொடாபாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டார்.
இதேபோன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதும் யாழ்.மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்மால் கூறப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றை தீர்ப்பதற்குரிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
அவை உரிய காலத்தில் விரைவாக செயல் வடிவம் பெறவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மக்களின் அடிப்ப டைப்பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டியது மிகமிக அவசியமானதொன்றாகும். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது என்றார்.