தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத் தமிழர்களின் நிலப் போராட்டத்தை பதிவு செய்த தீபச்செல்வனின் ‘தமிழர்பூமி’

16128345_1234304353322074_1190836082_n
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான போராட்டங்கள் குறித்த ஆவணமாக, ஈழக் கவிஞர் தீபச்செல்வனால் எழுதப்பட்ட தமிழர் பூமி நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த காட்டுனிஸ் பாலா புத்தகத்தை வெளியிட்டு வைக்க தமிழக கவிஞர் சீராளன் பெற்றுக் கொண்டார். 373 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இழந்த, போராட்டங்களின் வழி மீட்ட, ஆக்கிரமிக்கப்பட்டு மீட்கப்படவேண்டிய நிலங்கள் குறித்துப் பேசுகின்றது.

நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல் 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.

நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை, மற்றும் அரசியல் உரிமையை விஸ்தரிக்கின்றமை குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகின்றது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய மாவட்டங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், வடக்கின் எல்லையோரத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் அதன் அரசியல் குறித்தும் விபரிக்கும் ஆவணமாக அமைந்த இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தீபச்செல்வன் எழுதிய பேரினவாதத் தீ என்ற புதிய நூலினை தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிட்டு வைத்தார். சென்னைப் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நாஞ்சில் நாடன் வெளியிட கவிஞர் அகரமுதல்வன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். போருக்குப் பிந்தைய ஈழத்து மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் குறித்து விபரிக்கும் இந்தப் புத்தகம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஈழ மக்களின் வாழ்வுப் போராட்டம் குறித்தும் பேசுகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்தமை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் குறித்தும் இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் யாவரும் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...