Designed by Iniyas LTD
எதிர்க்கட்சிகள் மக்களிடையே தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் – அருண்ஜெட்லி
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களிடையே தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
பிரதமர் மோடி கட்சியை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கொண்டுவந்த நில எடுப்பு சட்டம் தான் விவசாயிகளுக்கு எதிரானது. நீர்ப்பாசனத்திற்கும் கிராமங்களில் சாலைகள் அமைப்பதற்கும் அச்சட்டம் தடையாக இருந்தது. அந்த அம்சங்களை மாற்றி கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் மூலம் கிராமங்களில் அமைக்கப்படும் தொழிற்சாலைகள் வாயிலாக புதிய வேலை வாய்ப்புகளும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடையும்.
இந்த கூட்டத்தில் அனைத்து விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. டெல்லி தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பல மாநிலங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. அரசு மட்டும் மாற்றங்களை கொண்டு வந்துவிட முடியாது, கட்சியின் பங்கும் முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.