தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் 30 ஆம் திகதி அமெரிக்காவிற்கு அனுப்பப்படவுள்ள மனித எச்சங்கள்…

மன்னார்  சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களிடம்   தெரிவித்துள்ளார்

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர்   இன்று  122 ஆவது நாளாக அகழ்வு பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை எனவும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவற்றை சீர் செய்து அகழ்வு இடம் பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் தற்பொழுது  இடம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் இன்றைய தினம் மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும்,   அவர் தெரிவித்துள்ளார்.

காபன் பரிசோதனையின்போது  மரணம் தொடர்பிலும் ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும் எனவும், அனுப்பப்படவுள்ள  மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள  சட்டவைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

இதேவேளை மன்னார் சதோசவளாகத்தில் தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...