தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

என்ன நடக்கிறது பர்மாவில்?

miஇன்றைய நாட்களில் உலகத்தின் அதிகமானவர்கள் உச்சரிக்கும் ஒரு சொல் ரொகிஞ்சா! ஆம் அந்த பெயரைத்தாங்கிய இனம் இன்று தெற்காசிய நாடான பர்மாவில் இன அழிப்புக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றது, “கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பினை மேற்கொண்ட “பெளத்தர்களே” இங்கும் இன அழிப்பை மேற்கொள்கின்றனர்”, பர்மிய இன அழிப்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வழிநடத்துபவர் அந்த நாட்டின் பெளத்த துறவி ”அசின் விராது தேரர்”. இலங்கையின் பொது பலசேனா என்ற புத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் ”ஞானசார” தேரரின் நண்பர்.

இவர் இஸ்லாம் தொடர்பான பல சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதால் பெளத்த தீவிரவாதத்தின் முகவரி என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் மேற்குலகாலும் அழைக்கப்படுபவர்.

அனைவரும் பொறுமை, அன்பு என்பவற்றை பௌத்தர்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். உலகில் அதிகளவில் பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுப்பவர்கள் பௌத்தர்களா? இலங்கை, பர்மா, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போஜியா ஆகிய நாடுகளே உலகில் எஞ்சியுள்ள தேரவாத பௌத்த நாடுகளாகும்.

கடந்த காலங்களில் பௌத்தர்களின் பொறுமையை சாதகமாகப் பயன்படுத்திய அடிப்படைவாதிகள் பிக்குகளைக் கொலை செய்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து பௌத்தத்தை இல்லாதொழித்தனர். உலகில் அதிக காலம் பௌத்தத்தை பாதுகாத்த இலங்கை மற்றும் பர்மா பிக்குகள் எதிர்காலத்திலும் அதனைப் பாதுகாக்க தலைமைத்துவத்தை வழங்கியுள்ளனர். நீங்கள் தேரவாத பௌத்தத்துக்கு உபதேசம் செய்யும் முன்னர் மேலைத்தேயர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி சீனாவினுள் திபெத் மக்களை சந்தோசமாக வாழ வழியேற்படுத்துங்கள்…….இது மியன்மாரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று கூறிய தலாய் லாமாவுக்கு அசின் விராது வழங்கிய பதில்.

இதிலிருந்து ஒன்றைப்புரிந்துகொள்ளலாம் உலகை அச்சுறுத்தும் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை பெளத்த பயங்கரவாதம் என்று.

மியன்மாரில் ரொகிஞ்சாக்களின் வாழ்க்கை என்பது இன்றைய நாட்களில் கேள்விக்குறியாகவே உள்ளது பர்மிய அரசு அவர்களின் குடியுரிமையினை ஏற்கனவே பறித்துவிட்டது. மியன்மாரில் அவர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது அவர்கள் யாரும் அங்கு நிலங்களை வாங்கி வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள முடியாது.அரசாங்கம் அவர்களை நாடற்றவர்களாகக் கருதி இரண்டாம்தர பிரஜைகளாக நடத்துகின்றது.

ரொகிஞ்சாக்கள் அடிப்படையில் வங்காளத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னதாக தஞ்சம் பிழைப்பதற்காக மியன்மாருக்கு வந்தனர்.மியன்மார் அரசு இன்றுவரையும் அவர்களை வங்கதேச குடியேறிகள் என்று குறிப்பிட்டு மியன்மாரின் மக்களில் இருந்து அவர்களை ஒதுக்கிவைத்துள்ளது.இவர்கள் விடயத்தில் இன்று மியன்மாரை ஆளும் ஆட்சியாளர்களும் எதிரணியினரும் ஒரே கண்ணோட்டத்திலேயே இருக்கின்றனர் மியன்மாரில் வசிக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கு கிடைக்கும் சலுகைகள் எவையும் ரொகிஞ்சா முஸ்லிம்களுக்கு இல்லை.

ரொகிஞ்சாக்கள் பின்பற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய கோட்பாட்டினை பர்மிய பெளத்தர்கள் மிகவும் வெறுக்கின்றனர். ரொகிஞ்சாக்கள் மிக வேகமாக கணக்கின்றி பிள்ளைகளை பெற்றுக்கொண்டு சனத்தொகையில் அதிகமாவது எதிர்காலத்தில் பெளத்தர்களின் இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடும் என்று ஆட்சியாளர்களும் எண்ணுகின்றனர். சமீபத்தில் ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளி குறைந்த பட்சம் மூன்றாண்டுகளாக இருக்கவேண்டும் என்று பர்மிய அரசு சட்டம் கொண்டுவந்தது அது ஏனைய சிறுபான்மையினத்தவரின் குடிப்பரம்பலை கட்டுப்பாட்டிற்குல் கொண்டுவரவே என்பது யாவரும் அறிந்ததே.

எது எவ்வாறாயினும் இன்றுவரை சுமார் 3000த்துக்கும் மேற்பட்ட ரொகிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  2000த்துக்கும் அதிகமானவர்கள் காணமல்போயுள்ளனர் பல்லாயிரக்கணக்கானவ்ர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பர்மிய பெளத்தர்களை பொறுத்தவரை ரொகிஞ்சாக்கள் எம் நாட்டின் குடிமக்கள் இல்லை அவர்கள் எங்கள் நாட்டினை விட்டு வெளியேற வேண்டும் இல்லாதுபோனால் அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்ற கொள்கையில் மிகவும் தீவிரமாக இருக்கின்றனர்.

ரொகிஞ்சா முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு அவர்கள் எந்த தடையினையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் ஐ.நா நடாத்தும் அகதி முகாம்களில் தஞ்சமடையுங்கள் என்று மியன்மார் அதிபர் தென் சேன் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மியன்மாரின் எல்லை நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசிய  போன்றவை ரொகிஞ்சாக்கள் தங்கள் நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக தங்கள் எல்லைகளில் காவலை அதிகரித்துள்ளனர்.

உண்மையிலேயே ரொகிஞ்சாக்களுக்கு இது ஒரு சோதனைக்காலம் அவர்களை ஏற்றுக்கொள்ள எந்தவொரு  நாடும் தயாராக இல்லை அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கக்கூட பல நாடுகள் முன்வரவில்லை.இந்தவேளையில் ரொகிஞ்சாக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வினை திரும்பக்கொடுக்க மியன்மாரால் மாத்திரமே முடியும்,ஆனால் அவ்வாறான ஒரு அமைதிச்சூழ்நிலையினை அங்கு ஏற்படுத்த அமெரிக்கா உற்பட மேற்குலக நாடுகள் முயட்சிக்கவேண்டும் ஆயினும் அமெரிக்கா அதிகப்படியான அழுத்தங்களை மியன்மரின்மீது பிரயோகிக்க தயங்குகின்றது அதன்மூலம் தம் பிடியில் இருந்து விலகி சீனாவினை நோக்கி மியன்மார் சென்று விடுமோ என்று அஞ்சுகின்றது இதே காரணத்தாலேயே இலங்கையில் தமிழர்கள் மீது பெளத்த மேலாதிக்கவாதம் மேற்கொண்ட இன அழிப்பினையும் கைகட்டி வேடிக்கை பார்த்தது அமெரிக்கா.

இதேவேளை மியன்மாரில் நடக்கும் இன அழிப்பினை காரணமாகக்காட்டி அங்கு ஒரு இஸ்லாமிய ஜிகாத் வழியிலான பயங்கரவாததை தோற்றுவிக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை தெற்காசியாவுக்குள் கொண்டுவரும் நுழைவாயிலாக மியன்மார் மாறிவிடக்கூடாது என்பதே இன்று பலரின் கவலையாக உள்ளது. ரொகிஞ்சா முஸ்லிம்கள் விடயத்தின் மென்போக்கினை கடைப்பிடிக்காதுபோனால் பாதிக்கப்படப்போவது ரொகிஞ்சாக்கள் மட்டுமல்ல மியன்மாரும்தான்….

-மோகன்-

Comments
Loading...