தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எபோலா வைரஸ்’ பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம், அவசரக் கூட்டம்

எபோலா வைரஸ்’ பாதிப்பு, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே, மிக மெதுவாகவே நடக்கின்றன என்றும், உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இந்நோய் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு, உலகில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், இது நீடிக்குமானால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அந்த அமைப்பு எச்சரித்து உள்ளது.

அவசர கூட்டம்: உயிர்கொல்லி நோயான, ‘எபோலா’ தொற்றால், உலக நாடுகளில் சுகாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பது குறித்து விவாதிக்க, உலக சுகாதார நிறுவனம், அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய அவசர நிலையையும், பிரகடனப் படுத்தி உள்ளது.இந்த வைரஸ் தொற்று, மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு, சர்வதேச நாடுகளுக்கு, அழைப்பு விடுத்துள்ளது.’இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரை, தனிமைப்படுத்துவதன் மூலம், வைரஸ் பரவுதலை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும்’ என, உலக சுகாதார நிறுவனம், முதல் கட்டமாக, மருத்துவ ஆலோசனை வழங்கி உள்ளது.’எபோலா’ வைரஸ் தொடர்பாக, லண்டனில் நடந்த, அவசர பரிசோதனைக்கு பின், ‘காற்று மூலம் இந்த தொற்று பரவுவதில்லை’ என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனாலும், சர்வதேச நாடுகள், இதுகுறித்து விழிப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.’எபோலா வைரஸ்’ (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா ரத்தப் போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று, மருத்துவ உலகில், இந்நோய்க்கு பெயரிடப்பட்டு உள்ளது. உயிர்கொல்லி நோய் இது என்பதால், கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்ட, 10 பேரில், ஒன்பது பேர்உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

பெரும்பாலானவர்கள், சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பின் தான், விபரீதத்தை உணர்வர். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், ரத்த அழுத்தம் குறையும்; நாடித் துடிப்பு பல மடங்கு உயரும்.இது, ‘எபோலா’ வைரஸ், உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பின், ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால், எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து, போய் சேர வேண்டியது தான். தொடுதல், முத்தமிடுதல், கட்டித் தழுவுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவலாம். ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, தண்ணீர் மற்றும் உயிரணுக்கள் மூலமும், இவ்வகை வைரஸ் பரவும்.இந்த நோய்க்கு இன்னும், மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், நோயாளிகளுக்கு தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால், உடலின் எதிர்ப்பாற்றலால், உயிர் பிழைக்கும் வாய்ப்புண்டு என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

எச்சரிக்கை: இந்த வைரஸ் பாதித்தவர்களை கண்டறிய, கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் தகுந்த பயற்சி பெற்ற செவிலியர்கள் மூலமே, ரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், ஆப்ரிக்க நாடுகளில், இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மட்டும், 80 பேர் பலியாகி உள்ளனர்.ஏனென்றால், இந்த நோய் மிக முக்கியமாக, ரத்தம் மூலமே பரவக் கூடியது என்பதால், சந்தேகப்படும் நபரின் உடலில் இருந்து ரத்தம் எடுக்கும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவ ஊழியர்களும், அதற்கான பாதுகாப்பான உடைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், அந்த ரத்தத்தை, இதற்கென உள்ள பிரத்யேக ஆய்வகத்தில் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த வைரஸ், வெளியில் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என்றும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.images (3)

இந்த ஆண்டில் 2,240 பேர் பலி: ‘எபோலா வைரஸ் நோய் தாக்குதலுக்கு, உலகம் முழுவதும், இந்த ஆண்டு இதுவரை, 2,240 பேர் பலியாகி உள்ளனர்’ என, உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், எபோலா வைரஸ் தாக்குதலுக்கு, இதுவரை, 1,229 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 14 மற்றும் 16ம் தேதிகளுக்கு இடையே மட்டும், 113 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு, உலகம் முழுவதும், 2,240 பேர் பலியாகி உள்ளனர்.கினியா, லைபீரியா, சியாரோ லியோனே, நைஜீரியா ஆகிய நான்கு நாடுகளில் தான், இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு ஆளான நாடுகள், அங்கிருந்து வெளியேறுவோருக்கு, சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில், தீவிர பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது. இதற்கிடையில், லைபீரியாவில், எபோலா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு ஆளான நோயாளிகள் தங்கியிருந்த மருத்துவமனை ஒன்றில், கடந்த சனியன்று சிலர், தாக்குதல் நடத்தினர். அப்போது, எபோலா பாதித்த நோயாளிகள் பலர், தப்பி ஓடி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Comments
Loading...