தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான் தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம்

பாகிஸ்தான் தூதரை மேலும் 2 காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்தித்து பேசினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான அவாமி நடவடிக்கை கமிட்டி தலைவர் மீர்வாய்ஸ் உமர் பாரூக், ஷபீர் ஷா உள்ளிட்டோருடன் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த இந்தியா, 25–ந் தேதி நடைபெற இருந்த இந்தியா–பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நேற்று மேலும் 2 பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் பேச்சுவார்த்தை நடத்தினார். சையது அலி ஷா ஜிலானி, ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோர்தான் அந்த பிரிவினைவாத தலைவர்கள்.

இதற்கிடையே, இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அவர்களை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து கூட்டிச்சென்றனர். ஆனால், பாகிஸ்தான் தூதரை திரும்பப்பெற மாட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் தெரிவித்தார்.

பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்து பேசியது, இருநாட்டு ராஜ்ய உறவுகளை மீறிய செயல் அல்ல என்றும், இதற்கு முன்பும் இத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அதே சமயத்தில், பாகிஸ்தான் தூதருடனான சந்திப்பை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் நியாயப்படுத்தி உள்ளனர். ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறியதாவது:–

இதுபோன்ற சந்திப்புகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. அப்படியானால், முன்பு இருந்த பிரதமர்கள் செய்தது எல்லாம் தவறு, இப்போதைய பிரதமர் செய்வதுதான் சரி என்று அர்த்தமா? இவ்வாறு அவர் கூறினார்.download

சையது அலி ஷா ஜிலானி கூறுகையில், ‘காஷ்மீரை உள்நாட்டு பிரச்சினை என்று இந்தியா கூறுவது, உண்மைக்கு புறம்பானது. அது சர்வதேச பிரச்சினை’ என்றார்.

மீர்வாய்ஸ் உமர் பாரூக் கூறுகையில், ‘நிதி உதவி மூலம் தீர்ப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை அல்ல. இது அரசியல் பிரச்சினை என்பதால், பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். எனவே, மோடி அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

Comments
Loading...