Designed by Iniyas LTD
எமக்கு யாழ் தேவி வேண்டாம் சுதந்திரத் தேவியே…………….

எமக்கு யாழ் தேவி வேண்டாம் சுதந்திரத் தேவியே…………….
தமிழர் பலி கேட்டு தலை அறுத்து
வலி பெருக்கிய
தலதாமாளிகை
படுகொலை வண்டவாளம்
மறைக்க
தண்டவாள வழியில்
ரயில் விடுகிறது
தேவிகளை வன்புணரும்
ஆர்மிகளின் தேசத்தில்
யாழ் தேவி நுழைகிறது
வீட்டுக் கோடிக்குப் பின்னால்
சிங்கக் கொடியோடு
வேகமாகப் போகிறது
வடக்கின் வசந்தம்
மார்பறுத்து
குறிசிதைத்து
கொல்லப்பட்ட
அம்மாக்களின்
மண்டை ஓடுகள்
கல்லாக்கப்பட்ட
ரயில் ரோட்டில்
யாழ் தேவி
ஓடத் தொடங்குகிறது
செத்தவன் நீதி கேட்டால்
கொன்றவன் ரயில் வீதி போட்டு
போலி காட்டும்
பூமியில்
அழுதும் கதறியும் ஆவதற்கு
ஒன்றுமில்லை
அதில் வெற்றி இல்லை
எனக் கற்றுக் கொண்டோம்
ஐ.நாவும் அம்மணி நவி பிள்ளையும்
எம்மை எதுவென நினைக்கின்றார்
ஐயகோ
கண்டனங்கள் கடிதங்கள்
என நீண்டு கொண்டே போகிறது
இனப்படுகொலைக்கான அமைதி
கொழும்புவுக்கு வீணை மீட்டும்
மிஞ்சிய எலும்பு நக்கி
விஞ்சி மகிழ்வது கண்டோம்
பஞ்சி பாராது
தன் வீட்டு பிஞ்சையே
பதவிக்காய்
கட்டிலில் பஞ்சாக்கும்
நீசர்ப் பரம்பரையின்
இறுதி விருட்சத்தின் அசைவு அது
யாழ்தேவி வந்து
எங்கள் முற்றங்களில்
ஒளிபரப்பி போகுமென்று
ஒலிபெருக்கும்
வலி அறியா வீணர்களே
உங்கள் அக்காள் ஒன்றுக்கு
போன படியே
தோட்டா உடல் கிழித்து
செத்துப் போவதை
சும்மா
நினைத்துப் பாருங்கள்
செத்தவரின் வீடுகளுக்கு
சுகம் தருமா
உங்கள் ரயில் சேவை
யாழ் தேவி ஓடும்
தண்டவாளங்களில்
பிடித்திருக்கும் துருக்கள்
வெறும் இரும்பின் துருவல்ல
என் அக்காவின்
என் அண்ணனின்
என் தம்பியின்
என் அம்மாவின்
என் அப்பாவின்
ஏன்
எனது காயங்களில் வடிந்த
குருதிகளின் கறையென
விளங்கும்
யாழ் தேவி ஓட்டிய
அரக்க அரசனின்
மகுடத்தில் தீப்பிடித்து
எரியும் ஒரு நாளில்
யாழ் முழுதும் தேவிகள்
ஊர்வலம் போவர்
அது சுதந்திர தேவிகளாகத் தான் இருக்கும்
எனக்குத் தெரியும்
எம் நிலத்தின் வெளி முழுதும்
தேவிகள் தோன்றப்போகும்
நாளில்
சிங்கங்கள் கொடி அசைக்க
எம் நிலம் அனுமதியாது
சங்கிலியனுக்கே ரயில் விடும்
துட்டகை முனுக்களே
போய் வருக
எங்களுக்கான ஒளி
எங்களிடமே உண்டென
எங்களுக்கு நன்றாகத் தெரியும்
போய் வருக.
-அகரமுதல்வன்
15.10.2014